கஜா நிவாரணத்துக்கு ஒரு கோடியே இருபது லட்சத்துக்கு நிவாரணப்பொருட்கள் வங்கினார் ‘நம்மவர்’ கமல்

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 11:46 AM IST
Highlights

’நடிகர்களும் நடிகர் சங்கங்களும் கஜா புயல் நிவாரண நிதிக்கு உதவவில்லையே என்று குற்றம் சாட்டவேண்டாம். தேவையான உதவிகள் எங்கள் தரப்பிலிருந்து வந்தே தீரும்’ என்று தெரிவித்த கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.


’நடிகர்களும் நடிகர் சங்கங்களும் கஜா புயல் நிவாரண நிதிக்கு உதவவில்லையே என்று குற்றம் சாட்டவேண்டாம். தேவையான உதவிகள் எங்கள் தரப்பிலிருந்து வந்தே தீரும்’ என்று தெரிவித்த கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை வழங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று காலை சென்னை விமானம் மூலம் திருச்சி வந்த கமல் அங்கு நிருபர்களைச் சந்தித்து கஜா புயல் நிலவரம் குறித்து விரிவாகப் பேசினார்.

கஜா புயல் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சேதமும் இவ்வளவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சேதம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் நிவாரண பணிகளை தொடர்ந்தபோது தான் சேதம் குறித்த முழுமையான தகவல் தெரிய வந்தது. அதிகாரிகள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளதை விட அதிக சேதம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் இதுவரை ரூ.60 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். இன்று மேலும் 70 வாகனங்களில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல உள்ளோம். அவர்களுடன் நானும் செல்ல உள்ளேன்.

ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை பொருட்களாக வழங்கி வருகிறோம். இன்னும் பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை பணமாக இல்லாமல் பொருட்களாக பெற்று வருகிறோம். அதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து வழங்குவோம்.

இதுவரை நிவாரண உதவிகள் சென்று சேராத, நிவாரண பொருட்கள் கிடைக்காத குக்கிராமங்களுக்கும் நாங்கள் சென்று வழங்க உள்ளோம். தேவைப்பட்டால் நான் அங்கேயே தங்கி பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். நிவாரண உதவிகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கும் செல்லும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்கள் விரட்டி அடிப்பதாகவும், அரசு வாகனங்களை தீ வைத்து எரித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அவர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனை சரியாக புரிந்து கொண்டு அரசும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். அமைச்சர்களுக்கு எதிராக மக்களை போராட எதிர்க்கட்சி தூண்டி விடுகிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது. நிவாரண பணிகள் மக்களிடம் கொண்டு சேர விடாமல் சிலர் தடுக்கிறார்கள் என்று கூறப்படுவதை நான் நேரில் சென்று பார்த்த பிறகுதான் கூறமுடியும். தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதத்தை முழுமையாக கணக்கிட வேண்டும். தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் நிவாரணம் மற்றும் இழப்பீடு போதுமானதாக இல்லை. தென்னைக்கு ரூ.1,100 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது கிடையாது.

கஜா புயலால் இன்னும் 4 ஆண்டுகளுக்கு பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை அரசு கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும். அதே போல் புயலால் உயிரிழந்தவர்களுக்கு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரண தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். இதுபோன்ற புயல் பாதிக்கப்பட்ட நேரங்களில் வெளி மாநிலங்களில் எவ்வாறாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதோ, அதேபோல் தமிழக அரசும் வழங்கவேண்டும். புயல் பாதித்து கடந்த 7 நாட்கள் ஆகியும் மத்திய அரசிடம் இருந்து சேதத்தை பார்வையிடவோ, மதிப்பிடவோ யாரும் வரவில்லை.

மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவேண்டும். மத்திய புயல் நிவாரண குழு தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்கவேண்டும். இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து நிவாரண உதவி கோருகிறார்.

அப்போது தமிழகத்தின் நிலைமையை தெளிவாக எடுத்துக்கூறி வலியுறுத்த வேண்டும். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்க வேண்டும். சாய்ந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, மேஸ்திரி வேலை பார்ப்பது போல புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை கையாளக்கூடாது. அது சரியல்ல, பாதிப்பின் தன்மையை உணர்ந்து மக்களுக்கு உதவவேண்டும்’ என்றார் கமல்
 

click me!