இதெல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து.. சினிமா விமர்சகராக மாறிய சுகாதாரத்துறை அமைச்சர்.. வச்சு செய்யும் கடம்பூரார்

By Ajmal KhanFirst Published Nov 24, 2022, 1:07 PM IST
Highlights

முதலமைச்சர், காலையில் நடைபயணம் செல்லும்போது அந்த அமைச்சரிடம் தன் மகனின் படத்தைப் பற்றி விசாரிப்பதும், திரையரங்கில் அந்த படத்தின் பாடல் காட்சிகளின்போது பெண்கள் எல்லாம் வெளியே போகவில்லை என்று அந்த அமைச்சர் சிலாகிப்பதும், நம் அப்பாவி மக்கள் தங்கள் தலையில் தாங்களே நெருப்பை அள்ளி கொட்டிக்கொண்டதைப்போல் இருப்பதாக கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

உதயநிதி நடித்த கழகத்தலைவன் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விமர்சனம் செய்வது போல் பேசுவதற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான தமிழகத்தில், தங்களின் சுய லாபத்திற்காக பல்வேறு வகையான ஜாதி, மத, இன பூசல்களை உருவாக்கி, கலகத் தலைவர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 18 மாத கால விடியா திமுக ஆட்சி, அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. குறிப்பாக ஏழை, எளிய மக்களின் உயிரைக் காக்க வேண்டிய மருத்துவத் துறை சீரழிந்து கிடக்கிறது. அந்தத் துறையை நிர்வகிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரோ, தன் பாசமிகு கழ(ல)கத் தலைவனின் வாரிசு நடித்த திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியில் பார்த்து ரசிக்கிறார். 

பாஜகவினர் தான் தமிழகத்தில் போதைப்பொருளை விற்பனை செய்கிறார்கள்..? கடும் குற்றச்சாட்டு கூறிய ஆர் எஸ் பாரதி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சினிமா விமர்சகராக மாறிவிட்ட காரணத்தினால், ஒரு சாதாரண கால்மூட்டு ஜவ்வு கிழிந்த சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விராங்கனையுமான செல்வி பிரியா அவர்கள், சரியான சிகிச்சை வழங்கப்படாமல் மரணமடைந்துள்ளார். அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் இவர்களுக்கெல்லாம் வழிகாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர், காலையில் நடைபயணம் செல்லும்போது அந்த அமைச்சரிடம் தன் மகனின் படத்தைப் பற்றி விசாரிப்பதும், திரையரங்கில் அந்த படத்தின் பாடல் காட்சிகளின்போது பெண்கள் எல்லாம் வெளியே போகவில்லை என்று அந்த அமைச்சர் சிலாகிப்பதும், நம் அப்பாவி மக்கள் தங்கள் தலையில் தாங்களே நெருப்பை அள்ளி கொட்டிக்கொண்டதைப்போல் ஆகும். இவர்களின் இந்த உரையாடலை சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் விளம்பரம் போல் ஒளிபரப்பி வருவது வெட்கக்கேடானதாகும்.

மமதையின் உச்சாணிக் கொம்பிலும், அதிகார போதையிலும் மிதந்த ஒரு அரசன் தன்னுடைய மந்திரிகளைப் பார்த்து 'மாதம் மும்மாரி பொழிகிறதா' - 'தமிழக மக்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்களா ? என்று கேட்பது போல் 'பதவியால் பெருமை அடைந்துள்ள' தற்போதைய பொம்மை முதலமைச்சர் தன் வாரிசு நடித்த படத்தை குடும்பத்தோடு சென்று பார்த்துவிட்டு நன்றாக உள்ளதா? என்று விசாரிப்பது நகைப்புக்குரியதாகும். இன்னொரு படத்தை தன் குடும்பத்தினருடன் பார்க்கிறார் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர். இந்த படத்தின் விநியோக உரிமையையும் நீயே வாங்கி விட்டாயா? என்று சிரித்தபடி வினவுகிறார். இந்தக் காட்சியும் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், திரைத்துறை ஒரு குடும்ப ஆதிக்கத்தின்கீழ் வந்துவிடுமே என்று திரைத் துறையினர் அச்சப்பட்டனர். அந்த அச்சம் தற்போது இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் உண்மையாகியுள்ளது.

மந்திரியானால் மாரத்தான் ஓடுவது. முதலமைச்சரானால் சைக்கிளில் செல்வது, நடைபயணம் போவது என்றெல்லாம் வித்தை காட்டி தங்களுக்கு சுய விளம்பரம் தேடாமல், நம்பி வாக்களித்த மக்களைக் காக்கும் பணியில் இதய சுத்தியோடு ஈடுபட வேண்டும் என்று இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்று வார்த்தை ஜாலம் காட்டும் இந்த முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தவுடன் 'என் மகன் பல படங்களில் நடிப்பார், நாங்கள் பார்த்து மகிழ்வோம் மக்களை மறப்போம்' என்று சொன்னாரா? இதுதான் இவர் சொல்லாததை செய்யும் லட்சணமா ?

https://tamil.asianetnews.com/tamilnadu/madurai-rajaji-hospital-explains-why-the-child-underwent-genital-surgery-rluaa0

கடந்த 18 மாத கால ஆட்சியில் குடும்ப ஆதிக்கம், லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை, கேளிக்கை, சுகபோகங்களில் வீணடித்தது போல், மீதமுள்ள 42 மாத கால் ஆட்சியையும் கழித்து விடலாம், நம்மை கேட்பதற்கு யாருக்கும் உரிமையில்லை, மீண்டும் தேர்தல் வரும்போது, 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் போன்று, தமிழக மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வெற்றி பெற்றுவிடலாம் என்ற இறுமாப்பு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் தெரிகிறது. 

ஆனால், இன்று தமிழக மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள் என்பதை இந்த நிர்வாக திறமையற்ற ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு, தங்களுடைய தான்தோன்றித்தனமான போக்கையும், எங்கும், எதிலும் விளம்பரம் தேடிக்கொள்ளும் போக்கையும் கைவிட்டுவிட்டு, 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என கடம்பூர் ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

குழந்தைக்கு நாக்குக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்தது ஏன்.? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்

click me!