
ஆட்சியை முடக்குவோம் முடக்குவோம் என்று ஏன் முடக்குவாதம் வந்தது போல பேசி கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியை விரைவில் முடக்குவோம் என்பதை சமீபமாக பரப்பி வருகிறார். மேலும் அதை தன்னுடைய அனைத்து பிரச்சாரங்களிலும் மறக்காமல் பதிவு செய்து வருகிறார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்க அந்த மாநிலத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆளுங்கட்சியினர் தொடர் முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை விரைவில் ஏற்படும் என்று தெரிவித்தார்.
குறிப்பாக, தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இன்னும் இருபத்தி ஏழு அமாவாசைதான் திமுக ஆட்சியில் இருக்கும் என்றும் ஆரூடம் கூறி வருகிறார். இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முடக்குவாதம் வரக்கூடாது. அதிலும் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு முடக்குவாதம் வரவே கூடாது. அதிலும் எதிர்க்கட்சி தலைவருக்கு முடக்குவாதம் வரக்கூடாது. இவர் ஏன் முடக்குவாதம் வந்ததுபோல பேசிக் கொண்டிருக்கிறார். காரணம் தனிப்பட்ட முறையில் இல்லை. ஜனநாயகத்தை முடக்குவோம் என்று சொல்ல எடப்பாடிக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. தோல்வியை நிச்சயம் உணர்ந்து விட்டார்கள்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவோம் என எஜமானி விசுவாசத்தால் அமாவாசை பெயரால் கற்பனையை வளர்த்துக் கொண்டால், திமுகவுக்கு ஒன்றும் பாதிப்பு வராது. ஆனால், அதிமுக காணாமல் போவது உறுதி. நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும், கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாத நிலையில், 8 மாத திமுக ஆட்சி சாதனையே முழுமையான வெற்றியை பெற்று தரும். அதனால்தான், எதிர்கட்சி தலைவர் எஜமானிய விசுவாசத்தால் அமாவாசை பெயரால் அரசை முடக்குவோம் என முடக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் திமுக இன்னும் கூடுதல் வெற்றியை பெறும். தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஜன்னி வந்ததுபோல் பேசி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.