அக்டோபர் 5-ம் தேதி வரை ஜெயில்... புழல் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ்!

By vinoth kumarFirst Published Sep 23, 2018, 11:50 AM IST
Highlights

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைதான எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு அக்டோபர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைதான எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு அக்டோபர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகி செல்வநாயகத்தையும் அக்டோபர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை நீதிபதி அதிரடியாக ரத்து செய்துள்ளார். 

முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில், நடிகரும் மற்றும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் பேசினார். முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும், இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது, காவல்துறை அதிகாரியிடமும், யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார். இதுதொடர்பாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 

இதனிடையே, இன்று அதிகாலை சாலிகிராமம் வீட்டில் நுழைந்த போலீசார் கருணாசை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கருணாஸ் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் எடப்பாடி ஒழிக என ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி கோபிநாத் வீட்டில் கருணாஸ் ஆஜர் படுத்தப்பட்டார். பிறகு கருணாஸ்க்கு அக்டோபர் 5-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!