
இன்று காலை நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் காத்திருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப் படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார்.
இதை அடுத்து, இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த, இந்த வழக்கில் வழக்கினைத் தொடுத்தவர்களில், வழக்கு தொடர்புடையவர்களில் முக்கியமானவரான சுப்பிரமணிய சுவாமி, 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசு தன்னுடைய நிலையைத் தெளிவாக்க, உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இந்த வழக்கின் பகீர் பின்னணியில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று தனது விளக்கத்தையும் தனது டிவிட்டர் பதிவுகளில் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர், ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்ட போது, எப்படி கொண்டாடினார்களோ அப்படியே இதையும் கொண்டாட வேண்டும். அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு என்ன ஆனது என்று தெரியும். அதே போன்றுதான் இந்த விஷயத்திலும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் சுவாமி.
இந்த விஷயத்தில் சுப்பிரமணிய சுவாமி என்ன செய்யப் போகிறார் என்பதற்கு அவர் அளித்துள்ள பதிலில், எனது தரப்பு குற்றச்சாட்டுகளை செக்ஷன் 210ன் கீழ் தனிப்பட்ட வகையில் வைத்துள்ளேன். அதன் மூலம் அரசானது சிபிஐ., மற்றும் அமலாக்கத்துறையின் மூலம் மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் சிபிஐ., மட்டுமல்லாது அமலாக்கத்துறையும் சம்பந்தப் பட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இந்த வழக்கினை நீர்த்துப் போகச் செய்வதற்கு எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் என்று குறிப்பிடும் சுவாமி, பாப்பா சோர், பேட்டா சோர் (தந்தை திருடன், மகன் திருடன்) என்று பெயர் குறிப்பிடாமல் ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர்கள் அமலாக்கத்துறை துணை இயக்குனரை எப்படி மிரட்டினார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இது குறித்து டிவிட் பதிவில் குறிப்பிட்டுள்ள சு.சுவாமி, அமலாக்கத்துறை ஜூனியர் டைரக்டர் விவகாரத்தில் ப.சிதம்பரம் என்னவிதமான நெருக்கடிகளைக் கொடுத்துள்ளார் என்பதை, சிபிஐ நீதிபதி சைனி கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள ஒருவர், சைனியை சகுனி என்று குறிப்பிட்டு தீர்ப்பு குறித்த அவரது பதிலைக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்புக்காகத்தான் இத்தனை முறை தள்ளி வைத்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆக மொத்தத்தில், நாட்டை உலுக்கிய இந்த வழக்கில் இவ்வளவு சாதாரணமாக அனைவரும் விடுதலை செய்யப் பட்டு விடும் அளவுக்கு சிபிஐயின் வலுவற்ற தன்மை திகழ்கிறதா அல்லது சிபிஐ அமைப்பே கண் துடைப்பா என்ற கேள்விகளை எழுப்புகின்றனர் டிவிட்டர்வாசிகள்!