
தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார்.
அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் 13-வது குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.
அவரை சொந்த ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து, அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார். அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17-ந்தேதி எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது என்பதால், வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு கடந்த மாதம் 27-ந்தேதி நீதிபதி நசீமா பானு முன்பு விசாரணைக்கு வந்த போது, சிறையில் இருந்து வைகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் வைகோ ஜாமீன் கேட்கவில்லை.
இந்தநிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி வைகோ திடீரென நேற்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புருஷோத்தமன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் போலீசார் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதையடுத்து அரசுக்கு தேவையில்லாமல் செலவு ஏற்படுவதால் வைகோவை சொந்த ஜாமீனில் விடலாம் என தெரிவித்த நீதிபதி, வைகோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.