நாட்டில் சகிப்பின்மையும், பிரிவினையும் தலையெடுக்கிறது….பத்திரிகையாளர் கொலைக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

First Published Sep 6, 2017, 10:24 PM IST
Highlights
journalist gowri langes murder...political parties are condumned


கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மவுனம் ஏன்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது-

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை வன்மையாக கண்டிக்கிறேன். வலதுசாரி, பாஸிச சக்திகள் சட்டத்தை கையில் எடுத்து, மிகுந்த ஆக்ரோஷமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த தாக்குதல் என்பது மதவாத சக்தி கொடூரத்தின் ஒரு பகுதிதான். இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் வலதுசாரி, மதவாத சக்திகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.  மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இந்த பாசிஸ தாக்குலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இந்த கொலை குறித்து பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மவுனமாக இருப்பது வியப்பளிக்கிறது இவ்வாறு தெரிவித்தார்.

அதிர்ச்சியளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது  பேஸ்புக்  பக்கத்தில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பது- மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். கர்நாடக மாநிலத்தில் முற்போக்கு மதச்சார்பற்ற சிந்தனைகள், கருத்துக்கள் வலுப்பெற்று வந்தநிலையில் இந்த கொலை நடந்துள்ளது. முற்போக்கு சிந்தையாளர் எம்.எம. கல்புர்கி கொல்லப்பட்டது போல் கவுரி லங்கேஷ்  கொல்லப்பட்டுள்ளார். மதச்சார்பின்மையிலும் அதிக நம்பிக்கை வைத்த லங்கேஷ், துணிச்சலான பத்திரிகையாளர். இந்த கொலைக்கு பின்புலத்தில் உள்ளவர்களை விரைவாக கர்நாடக அரசு கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டார்.

எச்சரிக்கை மணி அடித்துள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது- பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது துரதிருஷ்டமானது. வேதனைஅளிக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. இந்த கொலைக்கு விரைவாக நீதி வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சகிப்பின்மையும், பிரிவினையும் தலையெடுக்கிறது-  சோனியா காந்திகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டது சகிப்பற்றதன்மையும், பிரிவினைவாதமும் சமூகத்தில் வளர்ந்து வருவதை காட்டுகிறது. சுதந்திரமான சிந்தனைகளையும், அச்சமில்லாமல் கருத்துக்களையும் தெரிவிக்கும் துணிச்சலான பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்.

முற்போக்குவாதிகள், சுதந்திர சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த சூழல் எதிர் கருத்துக்கள் தெரிவிப்போர், மாறுபட்ட சிந்தனையாளர்கள், வேறுபட்ட பார்வை கொண்டவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுக்கவும் கூடாது.

ஜனநாயகத்தில் மிகவும் சோகமான ஒரு நிகழ்வு. ரத்தத்தை உறையவைக்கும் இந்த படுகொலை,சமூகத்தில் சகிப்பற்றதன்மையும், பிரிவினைவாதமும் வளர்ந்து வருவதை காட்டுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வௌியிட்ட பதிவில்கூறியிருப்பாவது-

மற்றொரு எதிர்ப்பு குரல் கொடுத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் குரலும் அமைதியாக்கப்பட்டுவிட்டது. நமது சுதந்திரம் ஆபத்தில் இருக்கிறது. எதிர்கருத்துக்கள் சுதந்திரமாக பேசவும், எழுதவும் இருக்கும் சூழலில்தான் சுதந்திரம் உயிர்வாழும். கவுரி லங்கேஷ் யாருக்கும் அஞ்சாத துணிச்சலான பத்திரிகையாளர். இந்த கொலையை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சகிப்பின்மை உருவாக்கம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பொலிட்பியூரோ பத்திரிகையாளர்கவுரி லங்கேஷின் ரத்தம் உறைய வைக்கும் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த கொலை என்பது, ஆர்.எஸ்.எஸ். , பா.ஜனதா கட்சிக்கு எதிராக துணிச்சலாக பேசுபவர்களின் குரலை துடைத்து எறியும் வழக்கமான செயலாக மாறி இருக்கிறது. சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரை, எம்.எம். கல்புர்கி ஆகியோர் தொடர்ந்து கொல்லப்பட்டுள்ளனர். இதுவும் அதோடு தொடர்புள்ளதாக இருக்கலாம்.

இவர்கள் அனைவரும் மூடநம்பிக்கைகள், அறிவார்ந்த செயல்பாடு, வலதுசாரி இந்துத்துவா சிந்தனைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள். இந்த கொலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!