
நகை கடனில் மோசடி
திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கும் கீழ் அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 14 லட்சம் நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக அதிமுக சார்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வாக்குகளை வாங்கி ஏமாற்றி விட்டாதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்., அப்போது நகைக்கடன் தள்ளுபடியில் திமுக கொடுத்த வாக்குறுதி படி செயல்படாததால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நகை கடனை முறைகேடாக பெறுவதற்காக போலி நகைகளையும், ஏட்டளவில் மட்டுமே நகைகளை அடகு வைத்தும், சேமிப்பு கணக்கில் முதலீடு , வைப்பு கணக்கில் முதலீடு என முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் பயிர் கடன் பெற்றதிலும் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்தவர் அரசின் பணம் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறினார்.
புது நிபந்தனை விதிப்பது ஏன்?
மாவட்ட வாரியாக ஆய்வு மற்றும் தணிக்கைத்துறை ஆய்வும் நடைபெற்றதாகவும், இதனடிப்படையில் இம்மாத இறுதிக்குள் 14 லட்சத்து 60 ஆயிரம் பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கபட உள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தூங்குவது போல் எதிர் கட்சிகள் நடிப்பதாக ஐ.பெரியசாமி தெரிவித்தார். இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்று மட்டுமே திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது என்றும் அதனை நம்பியே மக்கள் திமுகவிற்கு வாக்களித்ததாகவும், வங்கியில் கடன் பெற்றதாகவும் தெரிவித்தார். ஆனால் தற்போது புது நிபந்தனைகள் விதிப்பதாக குற்றசாட்டினார்.
தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி
அப்போது குறுகிட்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு உட்பட்டு தகுதியானவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி வழங்கபடவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா என கேள்வி எழுப்பினார் மேலும் குறுகிய எண்ணத்துடன் முறைகேட்டில் ஈட்டுபட்டு நகை கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டுமா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேள்வி எழுப்பினார். இந்த காரசார மோதல் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.