பிரம்பு கூடையில் அமர்ந்தபடி ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்…. ஆளுநர், பொன்னார் பங்கேற்பு!!

First Published Mar 1, 2018, 10:52 AM IST
Highlights
Jayenthirar body buriel in kanji brindavan


மாரடைப்பால் மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

2,520 வருடங்களுக்கு முன்பு ஆதி சங்கரரால் தொடங்கப்பட்டது காஞ்சி சங்கர மடம். இந்த காஞ்சி சங்கர மடத்தின் 69–வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள். 

82 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவ்வப்போது சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்ற போதும் ஜெயேந்திரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில்  நேற்று அதிகாலை ஜெயேந்திர சரசுவதி சுவாமிகளுக்கு திடீரென உடல் சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரை, மடத்தில் இருந்தவர்கள் உடனடியாக காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் சிகிச்சை பலன் இன்றி காலை 8.10 மணி அளவில் ஜெயேந்திரர் மரணம் அடைந்தார்.

பின்னர் ஜெயேந்திரரின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து காஞ்சி சங்கரமடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மடத்தில் வழக்கமாக ஜெயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அறையில் அவரது உடல் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. அவரது நெற்றி நிறைய விபூதி பூசப்பட்டு, குங்கும பொட்டு வைக்கப்பட்டு இருந்தது.

ஜெயேந்திரரின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இல.கணேசன் எம்.பி., தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயேந்திரர் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான பக்தர்கள் சங்கர மடத்துக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஜெயேந்திரரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால புரோகித், மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெயேந்திரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் ஜெயேந்திரர்  உடலை நல்லடக்கம் செய்தவற்கான இறுதி சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா பெரியவர் என அழைக்கப் படும், சந்திர சேகர சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான, சங்கர மடத்தின், 'பிருந்தாவனம்' அருகிலேயே, ஜெயேந்திரர் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயேந்திரரின் விருப்பப்படிஅவரது உடல் சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பிரம்பு கூடையில் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்கத்தை மடத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த எல்இடி திரை மூலம் பக்தர்கள் பார்த்தனர்.

click me!