ஜெயலலிதா மரணம்: என்ன சிகிச்சை கொடுத்தீங்க..?? அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன்

By manimegalai aFirst Published Mar 2, 2022, 12:53 PM IST
Highlights

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை தொடங்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆருக்கு பிறகு யாரும் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெறாத நிலையில்  2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து  போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்தார் ஜெயலலிதா,  இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரவோடு இரவாக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு  எய்ம்ஸ் உள்ளிட்ட லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்த போதும் 75 நாட்கள் அளிக்கப்பட்ட  சிகிச்சை பலனின்றி  டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவையே  அதிர்ச்சி அடைய செய்தது.

 இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், சசிகலாவை முதலமைச்சராக கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதனையடுத்து  திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என புது குண்டைத் தூக்கிப் போட்டார் இதனையடுத்து ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு தரப்பாக அதிமுக பிளவுபட்டது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன நிலையில் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணி இணைந்தது. இணைப்பில் முக்கிய கோரிக்கையான   ஜெயலிதா மரணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறுமுகசாமி ஆணையம்  2017 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணை ஆணையத்தில் 154 க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது. குறிப்பாக ஜெயலிதாவின் உதவியாளர்கள், சமையலர்கள், பாதுகாவலர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தியது  ஆறுமுகசாமி ஆணையம், .

அப்போது விசாரணையில் சரியான முறையில் நடைபெறவில்லையென்றும் தங்கள் மீது குற்றம் சுமத்தும் வகையில் ஆணையம் செயல்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடைபெற்றது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.இதனைதொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். இந்தநிலையில் உரியமுறையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் ஆறுமுகசாமி  ஆணையம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனையடுத்து யாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பன குறித்து ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தியது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட மருத்துவக்குழு மாற்றியமைப்பு புதிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆறுமுகசாமி ஆணையத்திற்கு  எய்ம்ஸ் இயக்குனர் அனுப்பியிருந்தார். எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவை மாற்றியமைத்து மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.முந்தைய குழுவில் 8 மருத்துவர்கள் 
இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அமைக்கப்பட்ட குழுவில் 6 மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த குறுக்கு விசாரணையின் போது ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆதாரங்களோடு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் திங்கள் கிழமை விசாரணையை தொடங்குவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவர்களிடம் விசாரணை முடிவடைந்ததும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உள்ளிட்டோருக்கு சம்மன் அளிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

click me!