
அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா.
காலத்தின் கட்டாங்கள் பலவற்றை வென்று காவியம் படைத்த ஜெயலலிதா, தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடத்தினை தக்க வைத்து இருந்தார்.
தமிழகத்தில் முதமைச்சராக 6 முறை பதவி வகித்தார். இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வதாக பெருமை பெற்றவர். அ.தி.மு.க., வின் பொதுச்செயலராக 29 ஆண்டுகள், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்த திறமைசாலி, தைரியமான பெண்மணி; 'அம்மா' என அழைக்கப்பட்டு பல சாதனைகளை படைத்தவர்.
கர்நாடகாவின் மைசூரில், 1948ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தார். அவரது 2 வயதில் தந்தை ஜெயராமை இழந்த அவர், அம்மா மற்றும் தாய்வழி தாத்தா--பாட்டி வாழ்ந்த பெங்களூருக்கு சென்றார்.
இங்கு தங்கிய சிறிது காலத்தில், சில ஆண்டுகள், 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்' பயின்றார். ஜெயலலிதா, 3 வயதில் இருந்தே பரதநாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார்.
மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய பாரம்பரிய நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். பரத நாட்டியக் கலையில் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
வெள்ளித் திரையில் அவரது தாய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், சென்னை சென்றார். ஜெயலலிதா சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, 'சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட்டில்' மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார்.
பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், உயர்கல்வி படிக்க மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமா துறையில் நுழைய நேரிட்டது. 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார்.
அப்போது, தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்பு செயலரானார். 1983ல் நடந்த திருச்செந்தூர் இடைத்தேர்தலில், பிரச்சார பொறுப்பை ஏற்றார்.
முதல் பணியை வெற்றிகரமாக முடித்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து, 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1989ல் போடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெயலலிதா அணி மற்றும் ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது.
இதன் விளைவாக, தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, 'சேவல்' சின்னத்தில் தனித்து போட்டியிட்டு, 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். 'இரட்டை இலை' சின்னம் மீட்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லூர் ஆகிய இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடித் தந்தார்.
1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க, கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
இந்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழத்தின் முதல் பெண் முதல்வர், 43 வயது கொண்ட இளம் முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது.
168 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பின், 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றியடைந்தது. இதற்கு ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார்.
2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளில், 195 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா 2வது முறையாக முதல்வரானார்.
2006 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 68 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போதைய தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார்.
இதன் பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. அ.தி.மு.க., மட்டும் தனியாக, 150 தொகுதிகளை கைப்பற்றியது.
இதையடுத்து, 2011, மே 16ல் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். அந்த நேரத்தில் நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோ£ட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.
2014 லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்டு, 39 தொகுதிகளில், 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார்.
கடந்த, 2014 செப்டம்பர் 27ம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார்.
22 நாட்களுக்கு பின் ஜாமினில் வெளிவந்த அவர், அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல் கர்நாடக உயர்நீதிமன்றம், முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் 227 இடங்களில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆருக்குப்பின் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் அவரது சாதனை மேலும் மெருகேறியது.