
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. டாக்டர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டு முதல்வர் ஜெயலலிதா வாங்கிக் குடித்தார் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்ச் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதில் காய்ச்சல் உடனடியாக குணமடைந்து விட்டாலும், சளி, மூச்சுத் திணறல் இருந்ததன் காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க புகழ்பெற்ற லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே கடந்த 30-ந் தேதி சென்னை வந்தார். தீவிர சிகிச்சை நிபுனரான டாக்டர் ரிச்சர்டு ஆலோசனையின் பேரில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், சுவாச உதவி ஆகியவை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த 5-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் கில்நானி(நுரையீரல்சிகிச்சை நிபுனர்),அஞ்சன் டிரிக்கா(மயக்கவியல் தீவிர சிகிச்சை), நிதிஷ்நாயக்(இதயசிகிச்சை நிபுனர்) ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னை அப்பல்லோவுக்கு வந்தனர்.
இவர்களும், அப்பல்லோ மருத்துவர்களும், லண்டன் டாக்டர் ஜான் ரிச்சர்டு பீலேவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன், எய்ம்ஸ் டாக்டர்கள் திரும்பிச் சென்றநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.
24 வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா தாகம் எடுப்பதாகக் கூறி நேற்றுமுன்தினம் டாக்டர்களிடம் 2 முறை தண்ணீர் கேட்டு, வாங்கிக் குடித்தார். திட உணவாக, நன்றாக வேக வைத்து, மசிக்கப்பட்ட ஆப்பிள் பழங்களை முதல்வர் ஜெயலலிதா சாப்பிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது . இருந்தாலும், நோய் தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க, மருத்துவமனையில் தங்கி இன்னும் சிலநாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
அதிகபட்சமாக இன்னும் 10 நாட்களில் முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்புவார் என அப்பல்லோவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.