
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று தனது விசாரணையை தொடங்கவுள்ள நிலையில் , தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷனை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை 3 மாதங்களில் நடத்திமுடித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று அதில் கூறப்பட்டிருந்தது. நீதிபதி ஆறுமுக சாமி இன்று தனது விசாரணையை தொடங்கவுள்ளார்.
இந்த விசாரணை கமிஷனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான கமிஷனின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் பி.ஏ.ஜோசப் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில் மாநில அரசு இதுபோன்ற விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், அதனை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி முடிவெடுக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைப்பதற்கு முன்பு சட்டசபையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் சட்டப்படி செல்லுபடியாகாது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.