
விசுவாசம் = ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசியல் அகராதியில் தேடினால் விசுவாசத்திற்கு அர்த்தம் ஓ.பி.எஸ்.தான் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் பன்னீர் செல்வம்.
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற வருத்தமான நேரத்திலும் ஓ.பி.எஸ்.ஸிற்கு அடித்தது ஜாக்பாட் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆரம்ப காலம் முதலே ஜெ.ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆவார்.
சசிகலாவின் நெருங்கிய உறவினராக டி.டி.வி தினகரன் மூலமாக கட்சியில் படிப்பாடியாக வளர்ந்து முதலமைச்சர் ஆகும் வரை உயர்ந்தார்.
ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பதவியை இழந்தபோது நம்பிக்கை துரோகம் செய்யாத நபரை அதிமுக தலைமை தேடியபோது கிடைத்தவர் தான் ஓ.பி.எஸ்.
பின்னர் பெங்களுரூ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பால் பதவியிழந்தபோதும், ஜெயலலிதா கண் முன்னாள் நின்றவர் ஓ.பி.எஸ்.தான்.
அதிமுகவில் லட்சக்கணக்கான விசுவாசிகள் இருந்தாலும், அத்தனை விசுவாசிகளையும் தனது ராஜ விசுவாசத்தால் அடித்து வீழ்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ்.என்றே சொல்லலாம்.
இந்த முறையும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையிலும் ஜெயலலிதா கவனித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் எடப்பாடி பழனிச்சாமி கவனிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.
காரணம், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது. ஜெயலலிதா மனதில் இருந்து ஓ.பி.எஸ்.விலக்கப்பட்டு விட்டார் என்ற தகவல்கள் பரவின.
அதற்கேற்றார் போல், ஓ.பி.எஸ்-ம் சில காலம் ஓரங்கட்டப்பட்டு இருந்தார். எம்.எல்.ஏ.சீட்டு கிடைக்குமா என்பதே அப்போது பெரிய கேள்வி குறியாக இருந்தது.
இந்தநிலையில், மீண்டும் ஓ.பி.எஸ். முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து பொறுப்புகளையும் கையாள்வார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ்.அறிவிக்கப்பட்டுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள் அதிமுகவினர்.
ஏனெனில் இது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் சாய்ஸ் என்பது தான் காரணம்.
இதிலிருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவே வாய்திறந்து அவரது பெயரை முன் மொழிந்திருக்க கூடும் என்பதால் பயப்படும் அளவிற்கு அவரது உடல்நிலைக்கு ஒன்றும் இல்லை என்பதும் தெளிவாகிறது.
அதிமுகவிற்கும், அதன் தலைமைக்கும் இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் போதெல்லாம் முக்கிய பொறுப்பிற்கு ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.