பாஜகவின் செயல் தலைவரானார் ஜே. பி.நட்டா !! மோடி அதிரடி முடிவு !!

By Selvanayagam PFirst Published Jun 17, 2019, 8:29 PM IST
Highlights

பாஜகவின்  தேசியத் தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராகிவிட்டதால், மூத்த தலைவர் ஜே.பி. நட்டா  அக்கட்சியின்   செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, மத்திய அமைச்சர் பதவியேற்றுள்ள அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் பதவியில் தொடரமாட்டார். அதே நேரத்தில், கடந்த ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த ஜே.பி.நட்டா, இந்த முறை அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அவருக்கு பாஜக தேசியத் தலைவர் பதவி அளிக்கப்பட இருப்பதாலேயே அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை என்று பாஜக வட்டாரங்களில் கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது.

ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிராமண சமுதாயத் தலைவரான நட்டா, கட்சியின் அனைத்து தரப்பினரின் அபிமானத்தையும் பெற்றவர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பிக்கைக்குரியவர். கட்சிக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புள்ள அவர், ஹிமாசலப் பிரதேசத்தில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
 
இதுவரை எவ்வித சிறிய விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர். எனவே, அவர் பாஜக தேசியத் தலைவர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று கட்சியின் அனைத்துத் தரப்பினரும் கருதுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில்பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம்  பிரதமர் மோடி தலைமையில் இனறு நடைபெற்றது. அதில் பாஜகவின் மூத்த தலைவர் ஜே.பி.நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராகிவிட்டதால், தற்போது புதய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆனால் வரும் டிசம்பர் மாதம் வரை அமித்ஷாவே பாஜக தேசிய தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!