TN Assembly 2022 : விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்... எப்போது தெரியுமா ?

Published : Mar 02, 2022, 08:19 AM IST
TN Assembly 2022 : விரைவில் கூடுகிறது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்... எப்போது தெரியுமா ?

சுருக்கம்

தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கடந்த மாதம்  8ம் தேதி நடத்தப்பட்டது. மத்திய பட்ஜெட் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

எனவே தமிழக அரசின் பட்ஜெட்டை தயார் செய்வதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் அவற்றுக்கான சங்க பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. மேலும் வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்காக வேளாண்மை துறை தீவிரம் காட்டி வருகிறது. வேளாண் சங்கங்கள், விவசாயிகள் மற்றும் அதன் தொடர்புடைய நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து அவர்களின் கருத்துகளை வேளாண்மைத்துறை பெற்றுள்ளது.

இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க கூடும் என்று சட்டசபை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் 18ம் தேதியன்றும், வேளாண்மை பட்ஜெட் 19ம் தேதியன்றும் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண்மைத் துறை பட்ஜெட்டை அந்தத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்வார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது உள்பட பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள், வெளிநடப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!