Isaivani Police Complaint: ஆசிட் அடிப்பேன் என மிரட்டுகிறார்.. முன்னாள் கணவன் மீது கானா பாடகி இசைவாணி புகார்.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2022, 4:28 PM IST
Highlights

நீ கச்சேரிக்கு செல்லும் பொழுது உன் மீது ஆசிட் வீசி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் நானும் சதீஷும் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார். 

தனது முன்னாள் கணவர் முகத்தில் ஆசிட் அடிப்பேன் என தன்னை மிரட்டுகிறார் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கானா பாடகி இசைவாணி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். கோவையில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ள நிலையில் இசைவாணி இதேபோன்று மிரட்டல் தொடர்பாக புகார் கொடுத்திருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது

."தி கேட்டிலஸ் சாங் " மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் கானாக் குயில் இசைவாணி. வட சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் கானா பாடல்களை பாடி புகழ் பெற்றவராவார். இவரது தந்தை சிவக்குமார் ஆர்மோனியம் வாசிப்பவர். கச்சேரி கலை நிகழ்ச்சிகளில் இசைக் கலைஞராக வேலை பார்த்துக் கொண்டுள்ளார். பிபிசி நிறுவனம் உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக இசைஞானியை தேர்வு செய்து பெருமைப்படுத்தியது. அவரின் கடுமையான முயற்சி, தனி திறமையின் மூலம் பெண்கள் கால் பதிக்க தயங்கிய கானா இசைத்துறையில் உச்சத்தை தொட்டுள்ளார் இசைவாணி. இதனால்  இந்தியாவிலிருந்து பிபிசி வெளியிட்ட பட்டியலில் இடம் பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

அவர் பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாக ஒலித்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவர், அதிலும் சிறப்பாக விளையாடி பேரும் புகழும் பெற்றுள்ளார். இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் என்பவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் சதீஷ் என்ற பப்லுவும் தானும் சட்டப்படி முறையாக divorce பெற்ற பிறகு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இசைக்கச்சேரியில் எனக்குண்டான சம்பளத்தை எனக்கு தெரியாமல் பெற்று வருவதுடன், பல இடங்களில் கச்சேரியில் முன் பணத்தைப் பெற்றுக் கொண்டு எனது மனைவியை பாட வைக்கிறேன் எனக் கூறி பணத்தை அட்வான்ஸ் பெற்று வருகிறார்.

மேலும் கச்சேரிக்கு நான்பாட செல்வதில்லை, அதனால் பணத்தை இழந்தவர்கள் எனக்கு போன் செய்து பணத்தை என்னிடம் கேட்கிறார்கள். இதனால் எனது நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடத்தில் இதைப்பற்றி கேட்டபோது, அப்படித்தான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் திட்டியும், நீ கச்சேரிக்கு செல்லும் பொழுது உன் மீது ஆசிட் வீசி விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும் நானும் சதீஷும் திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விவாகரத்திற்கு பிறகும் தொடர்ந்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார். இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். விவாகரத்து பெற்ற விஷயங்களை பொய் என்பது போல தோற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து எனக்கு தொந்தரவு செய்து வருகிறார்.

எனவே என் மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் மேற்படி சதீஷ் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர் சமூக வலை தளங்களில் பதிவேற்றியுள்ள எனது புகைப்படங்களை அகற்றியும், மற்றும் எனது  பெயரில் சதீஷ் என்ற பப்லு அவர்கள் பயன்படுத்தி வரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய கணக்குகளை நீக்கம் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.  
 

click me!