பெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா..? சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.!

By Asianet TamilFirst Published Oct 28, 2020, 8:49 PM IST
Highlights

ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக - அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை  ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பாஜக எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல. அப்படியிருக்கும்போது - ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த, அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக - அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!
பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பாஜக கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வு. பெண்ணினத்திடம் பாஜகவிற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பாஜக ‘பிராண்ட்’ கலாச்சாரமா? பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் டாக்டர் சுதா  சேசையனையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பாஜக அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.
பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட சுதா சேசையன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும்  கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்  சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தனை கேட்டுக் கொள்கிறேன்.


தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து - ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு - தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

click me!