ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா..? பட்ஜெட்டில் அதிர்ச்சி அறிவிப்பு...!

Published : Mar 18, 2022, 04:31 PM ISTUpdated : Mar 18, 2022, 04:36 PM IST
ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா..? பட்ஜெட்டில் அதிர்ச்சி அறிவிப்பு...!

சுருக்கம்

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

திருமண உதவி திட்டம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏழ்மையான  நிலையில் உள்ள விதவையரின் மகள்களுக்கு ஈவேரா மணியம்மையார் நினைவு திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான அன்னை தெரசா அம்மையர் நினைவு திட்டம், விதவையர்கள் மறுமணத்திற்கான டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகிய திட்டங்களில் எவ்வித மாற்றமும் இன்றி 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. 

 

உயர்கல்வி உறுதி திட்டம்

இந்நிலையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் தற்போது பட்ஜெட்டில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தாலிக்கு தங்கம் மற்றும் 50  ஆயிரம் ரூபாய்க்கு பதில், இனி உயர்கல்வி உறுதி திட்டம் என்ற பெயரில் அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மட்டும், மாதம் ஆயிரம் ரூபாய், மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பெண்கள் வரை பயன் அடையக்கூடிய மூவலூர் ராமமிர்தம் திருமண உதவித் திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிக்கு  தங்கம் திட்டம் ?

அதிக பயனாளிகள் கொண்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சம் ரூபாய் வரை பயன் அடைந்து வந்த பெண்கள், இனி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் குறைந்தபட்சமாக 24 ஆயிரம் ரூபாயிலிருந்து, அதிக பட்சமாக 48 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பயன் பெற கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாலிக்கு தங்கம்  திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே  கடந்த 2 வருடங்களுக்கு மேல் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்திற்கான உதவி கிடைக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?