
தோல்வியால் கடும் விரக்தி…கேரளாவில் ஓய்வெடுக்கிறார் இரோம் ஷர்மிளா…
மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா கடும் விரக்தியில் இருப்பதால் கேரள மாநிலம் வந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு உரிமைகள் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தார் இரோம் ஷர்மிளா.
15 ஆண்டுகளாக வாய் வழியாக உணவு உட்கொள்ளாமல் அவர் போராட்டத்தில் ஈடுபட்டது உலகையே ஈர்த்தது. இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்
திருமணம்கூட செய்து கொள்ளாமல் மணிப்பூர் மாநிலத்துக்காக அவர் நடத்திய போராட்டம் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது.
இந்நிலையில் 15 ஆண்டு கால போராட்டத்தை கைவிட்ட அவர் அண்மையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளாவுக்கு மணிப்பூர் மக்கள் அளித்த பரிசு வெறும் 90 வாக்குகள்தான்.
இந்தியாவையே அதிர வைத்த இந்த தேர்தல் முடிவுகளால் இரோம் ஷர்மிளா கடும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரோம் ஷர்மிளா கேரளாவில் உள்ள அட்டப்பாடிக்கு வருகை தந்துள்ளார். தமிழக, கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதிக்கு இரோம் ஷர்மிளா வந்துள்ளார்.
இந்த பழங்குடியின மக்களிடையே ஒரு மாதம் வரை தங்கி, ஓய்வு எடுக்க, இரோம் ஷர்மிளா திட்டமிட்டுள்ளார். இதற்காக,அட்டப்பாடி வந்துள்ள இரோம் ஷர்மிளாவை அப்பகுதி மக்கள் மிகுந்த அன்புடம் வரவேற்று உபசரித்து வருகின்றனர்.