
குஜராத் சட்டமன்ற தேர்தலில் வட்காம் தொகுதியில் போட்டியிட்ட தலித் சுயேட்சை வேட்பாள ஜிக்னேஷ் மேவானி முன்னிலை வகிக்கிறார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.
குஜராத்தில் மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக முதல்வர் வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான பிரேம் குமார் துமால், காங்கிரஸ் வேட்பாளரை விட பின் தங்கி உள்ளார்.
இந்நிலையில், குஜராத்தில் வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தலித் வேட்பாளர் ஜிக்னேஷ் மேவானி, பாஜக வேட்பாளர் சக்ரவர்த்தி விஜய் குமாரைக் காட்டிலும் 7000 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவந்த ஜிக்னேஷ் மேவானி, பாஜகவை எதிர்த்து வட்காமில் களம் கண்டார். பாஜகவை வீழ்த்துவதை குறிக்கோளாக கொண்டு களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி, பாஜக வேட்பாளரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகிக்கிறார்.
பாஜகவின் ஆதிக்கம் நிறைந்த குஜராத்தில், தலித் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி, ஆளும் பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு தற்போது முன்னிலையும் வகிக்கிறார். அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு ஜிக்னேஷ் மேவானி ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.