2025ம் ஆண்டில் இந்தியாவின் லெவல் வேற. 2022க்குள் அமெரிக்காவை அடித்து தூக்கும் சீனா.. ஆய்வு நிறுவனம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2020, 5:24 PM IST
Highlights

வளர்ச்சி விகிதம் மந்தநிலை, வங்கி அமைப்பில் ஏற்பட்ட  சீர்திருத்தம், அதனால் ஏற்பட்ட குழப்பம் போன்றவற்றால் இந்தியா கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. 

வரும் 2025ம் ஆண்டில் இந்தியா சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 5வது நாடாகவும், அது 2030ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும்  மாறும் என திங்க் டேங்க் என்ற பொருளாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. தற்போது 6-வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியா,  ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த நாடுகளின் பொருளாதாரத்தையும் கபளீகரம் செய்துள்ளது.  கொரோனா வைரசால் மற்ற நாடுகளை விட இந்திய பொருளாதாரம் அதிக அளவிலான பாதிப்புகளை எதிர் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரசுக்கான தடுப்பு மருந்து வந்துவிட்டால் நாடும் அதன் வர்த்தகமும் இயல்பான நிலைக்கு திரும்பும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பொருளாதார நிறுவனத்தின் கணிப்பின்படி, கொரோனா பாதிப்புகள் தீர்ந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பே இந்தியாவில் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதல பாதாளத்தில் தள்ளியது. 

இதனால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் இந்தியா தவித்தது. இதை கொரோனா மேலும் மோசமாகிவிட்டது. கொரோனாவுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில்  பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வெறும் 4.5 சதவீதமாக மட்டுமே இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் சிஇபிஆர்  என்ற வணிக ஆராய்ச்சி மையம் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, இந்தியா தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் கூட 2025 ஆம் ஆண்டில் அதன் பொருளாதாரம் மிகவும் வளர்ந்த பொருளாதாரமாக இருக்கும். ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக உயரும், அது மேலும் அதிகரித்து 2030க்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதாரமிக்க நாடாக மாறும். 

இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பானை முந்திக்கொண்டு இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் 2022க்குள் சீனா, அமெரிக்காவின் பொருளாதாரத்தை  விஞ்சும் என்றும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா மாறும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பான் 2030ல் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்படும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019 பெரும் 4.2 சதவீதமாக இருந்தது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் அது என கருதப்படுகிறது. ஆனால் 2018ல் 6.1 சதவீதமாகவும் 2016 இல் 8.3 சதவீதமாகவும் அதிகரித்தது. 

வளர்ச்சி விகிதம் மந்தநிலை, வங்கி அமைப்பில் ஏற்பட்ட  சீர்திருத்தம், அதனால் ஏற்பட்ட குழப்பம் போன்றவற்றால் இந்தியா கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இதுவரை இந்தியாவில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியா கண்டிராதா உயிரிழப்பு விகிதமாக இது கருதப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை விவசாயம் மிக முக்கியமான துறையாக உள்ளது. அது ஒரு  மீட்சியை கண்டுள்ளது கொரோனா நேரத்தில் சுமார் 29 லட்சம் கோடி ரூபாயை நிவாரணமாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. அது இந்திய பொருளாதாரத்தின் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

click me!