
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சஞ்சுவான் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும்,அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விரைவில் இருக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. அங்கு கடந்த 10 ஆம் தேதி அதிகாலையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தாக்குதலை தொடங்கினர்.
27 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதேபோல, ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் முகாமில் நேற்று காலை புகுந்த தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த இரு தாக்குதல்களுக்கும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பேற்றுள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை அடுத்து, அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தியுடன் ஆலோசணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற அசார் மசூத் இயக்கமான ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 4 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதில், மூன்று பேர் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்தார். மேலும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் விரைவில் இருக்கும் என்றும், இதற்கு பாகிஸ்தான் தகுந்த விலை கொடுக்க நேரிடும் என்றும் நிர்மலா சீத்தாராமன் எச்சரித்தார்.