கள்ள ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை தேவை... தென் சென்னை சுயேட்சை வேட்பாளர் அடம்!

By Asianet TamilFirst Published May 10, 2019, 7:35 AM IST
Highlights

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், கள்ள ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கும் நிலையில், தென் சென்னை தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயேட்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியுள்ளார்.


தமிழகத்தில் ஏப்ரல் 18 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர்கள் ஸ்ரீகாந்த், சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக சர்ச்சை எழுந்தது. அந்த விவகாரம் தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அறிக்கை பெறப்பட்டது. இதன்பின்னர் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிவிட்டது.


இந்நிலையில் தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாகவும், அதன் காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் கள்ள ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் சென்னை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஜெயராமன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


அவரது புகாரில், “தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு போட்டுள்ளார். வாக்காளர் பட்டியலில் அவருடைய இல்லை. ஆனாலும் வாக்களித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் ஆணையமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது 13 வாக்குச் சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.  
இதில் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த வாக்குச்சாவடி இடம் பெறவில்லை. இது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல், கள்ள ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த் மீதும் அதற்கு அனுமதி வழங்கிய தேர்தல் அலுவலர்கள், கட்சி முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!