தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா..? போக்குவரத்து நிர்வாகம் விளக்கம்..!

By vinoth kumarFirst Published May 31, 2020, 1:43 PM IST
Highlights

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை நிர்வாகம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக போக்குவரத்து நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில்  பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை நிர்வாகம் கூறியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுபோக்குவரத்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, பேருந்து கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும். தனியார் பேருந்துகளில் கட்டணம் குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களுக்கு உள்ளேயே மட்டுமே பேருந்து இயக்கப்படும். ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்தின் எல்லை வரை பேருந்துகள் இயக்கப்படும். மண்டலம் விட்டு மண்டலங்களுக்கு பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் அவசியம்.

மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யலாம். சென்னையில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு சென்று விட்டு 48 மணி நேரத்தில் திரும்பினால் தனிமைப்படுத்த தேவையில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!