
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் சென்னை அண்ணாநகர் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு தெரிந்தவர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது இதுவே முதல் முறை.
ராமோகன் ராவின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால், வீட்டுக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. அதேபோல, வீட்டில் இருந்தும் வெளியே வரவு அனுமதியில்லை.
செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள், வீட்டின் வாயிலில் காத்திருக்கிறார்கள். இதேபோல், தலைமை செயலாளருக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் ராமமோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்.
1985ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி. ஏற்கனவே இவர், தமிழக அரசில் வேளாண், சமூக நலம், ஊரக வீட்டு வளர்ச்சி, தொழில் மேம்பாடு உள்ளிட்டதுறைகளில் பணியாற்றியவர்.
கடந்த ஜூன் 8ம் தேதி தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், வரும் 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில், இன்று அவரது வீட்டில் இன்று சோதனை நடந்து வருகிறது.