நீட் தேர்வறையில் தாலி, மெட்டியை கழற்ற கூறி கெடுபிடி... மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Nov 3, 2020, 10:57 AM IST
Highlights

நீட் தேர்வின் போது தாலி, கம்மலை கழற்ற உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வின் போது தாலி, கம்மலை கழற்ற உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
 
தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிவதற்கும், பர்ஸ் உள்ளிட்ட உடைமைகளை உடன் எடுத்துச் செல்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஆண்டுதோறும் மாணவ மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் நீட் தேர்வில் கலந்து கொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி போன்றவற்றைக் கழற்றி தரும்படி நிர்ப்பந்திக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வு எழுதுபவர்கள் கண்காணிக்கப்படும் சூழலில் புனிதமான தாலி மற்றும் ஆபரணங்களை கழற்றி தரும்படி நிர்ப்பந்திப்பது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் தாலி மற்றும் ஆபரணங்களை கழற்றும்படி நிர்பந்திக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தர விடும்படி மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஸ், கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி கேட்டு மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறை, பொது சுகாதார சேவை இயக்குனர், தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

click me!