
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் 1.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில் குமார் ஜக்கார் அபார வெற்றி பெற்றார்.
பா.ஜனதா வேட்பாளர் ஸ்வரன் சிங் சலாரியா படுதோல்வி அடைந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு இந்த இடைத் தேர்தல் முன்னோட்டமாகவும், மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரியினால் மக்கள் அடைந்த பாதிப்பின் எதிரொலியாக இது இருக்கிறது என காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சாபில் கடந்த 10 ஆண்டுகளாக அகாலிதளம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்தி வந்தது. கடந்த 6 மாதத்துக்கு முன் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, கேப்டன் அமரிந்தர் சிங் முதல் அமைச்சராகப் பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்த நடிகர் வினோத் கண்ணா சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் சுனில் குமார் ஜக்காரும், அவரை எதிர்த்து பா.ஜனதா கட்சி சார்பில் ஸ்வரன் சிங் சலரியாவும் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுரேஷ் கஜூரியா போட்டியிட்டார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுனில் குமார் ஜக்கார் 4 லட்சத்து 99 ஆயிரத்து 752 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஸ்வரன் சிங் சலரியாவைக் காட்டிலும் 1.93 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். அதேசமயம். பா.ஜனதா வேட்பாளர் ஸ்வரன் சிங் 3 லட்சத்து 6 ஆயிரத்து 553 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆம் ஆத்மி வேட்பாளர் 23 ஆயிரத்து 579 வாக்குகள் மட்டுமே பெற்று தனது ெடபாசிட்தொகையை இழந்தார்.
குருதாஸ்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற மிகப்பெரிய, சாதனை வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 1980ம் ஆண்டு காங்கிரஸ் எம்.பி. சுக்பன்ஸ் கவுர் பிந்தர் என்பவர் 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அதை சுனில் குமார் ஜக்கார் முறியடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
குருதாஸ் பூர் மக்களவைத் தொகுதி என்பது, ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், நடிகர் வினோத் கண்ணா களம் இறக்கப்பட்டவுடன், கடந்த 1998ம் ஆண்டில் இருந்து 2014ம் ஆண்டுவரை அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால், அவர் மறைவுக்குபின் நடந்த இந்த இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கைக்கு வந்துள்ளது.