திமுக அரசின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு பாதிக்கும் அபாயம்.. பகீர் கிளப்பும் CV.சண்முகம்

By vinoth kumarFirst Published Jun 30, 2021, 3:31 PM IST
Highlights

. நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய செயல்திட்டம் வைத்திருப்பதாக ஸ்டாலின் அப்போது கூறினார். 

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ளது ஏமாற்றுவேலை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக பிரமுகர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையில்,  முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ளது ஏமாற்றுவேலை. நீட் தேவையில்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. நீட் தேர்வு வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் தான் சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய செயல்திட்டம் வைத்திருப்பதாக ஸ்டாலின் அப்போது கூறினார். 

நீட் தேர்வு ரத்து என்ற பெயரில் திமுக அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்தது. அதிமுக அரசு கொண்டு வந்த பிறகு 450 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு இல்லாத போது 10 ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் வெறும் 74 பேருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது. ஆனால், அதிமுக அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் அரசு பள்ளி மாணவர்கள் 450 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து பலனடைந்தனர். 

தமிழ்நாட்டில் மோடி வந்தால் போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு டெல்லி சென்று திமுக எம்.பி.க்கள் போராட வேண்டும். நீட் பாதிப்பு குறித்து ஆராய குழு அமைத்தது பற்றி உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு திமுக அரசின் பதில் என்ன? 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கெடுக்க திமுக முயற்சி செய்வதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். திமுக அரசின் முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!