"சசிகலாவால் நான் பிரபலமானேன்"- டிஐஜி ரூபா பளீர் பேச்சு...

First Published Feb 24, 2018, 11:35 AM IST
Highlights
Im famous by Sasikala DIG Rupee


சசிகலா வால் தான் நான் பிரபலமானேன் என கர்நாடகா மாநில பெங்களூரு சிறைத் துறை டிஐஜி அதிகாரியாக இருந்த ரூபா ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டவர், சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் குடும்பத்தினருக்கு கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் பல உதவிகள் செய்துவருவதாகக் குறிப்பிட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது அண்ணன் மனைவி இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்துவருகின்றனர். கடந்த ஆண்டு பெங்களூரு சிறைத் துறை டிஐஜி அதிகாரியாக இருந்த ரூபா ஐபிஎஸ், சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக புகாரை கிளப்பினார் இது கர்நாடக தமிழகம் என பெரும் அதிர்வலையை உருவாக்கியது.

இதுபற்றி விசாரித்த வினய்குமார் கமிஷன், தன் அறிக்கையை கர்நாடகா மாநில அரசுக்கு அளித்தது. அதில், சசிகலாவுக்குச் சிறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டது பற்றியும், சிறைத் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சையை அடுத்து, பெங்களூரு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ரூபா தற்போது பெங்களூருவில் ஊர்க்காவல் படையில் ஐஜியாக இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் வாழும் கலை அமைப்பு சார்பாக, நடந்த 8ஆவது சர்வதேச பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டார் ரூபா. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி, அனுராதா கொய்ராலா, அட்ரியானா மரைஸ் உட்பட பல இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரூபா, தான் சீருடையில் வராத காரணத்தினால் என்னைப் பலருக்கு அடையாளம் தெரியவில்லை என கூறினார். “இந்த நிகழ்ச்சியிலிருந்து, நான் முன்கூட்டியே கிளம்ப வேண்டியுள்ளது. இன்று வேலை நாள் என்பது தான் காரணம். எனது பெயர் ரூபா. நான் இன்று சீருடையில் வரவில்லை.

அதனால், நான் யார் என்று அறிய நீங்கள் கஷ்டப்படலாம். பரப்பன அக்ரஹாராவில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் செய்துகொடுத்த விவகாரத்தை வெளியே தெரிய வைத்ததனால், உங்கள் நினைவில் நான் இருக்கிறேன்” என கலகலப்பான மேடையாக மாற்றினார்.

தொடர்ந்து பேசிய ரூபா, சிறைத் துறை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். “சிறை என்பது தவறுகளைத் திருத்திக்கொள்ளும் இடமாக வலியுறுத்தப்படுகிறது; புனர்வாழ்வையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்தும் இடமாக அறியப்படுகிறது. அது அப்படி இல்லையென்றால், அதுவே மிகவும் மோசமான குற்றவாளிகளை உருவாக்கும் இடமாகவும் விளங்குகிறது.

சிறையில் இருப்பவர்கள், சமுதாயத்துக்குப் பெரிதும் தீங்கிழைப்பவர்களாக மாறுகிறார்கள். சிறைக்கு உள்ளே செல்லும் குற்றவாளிகள், பெரிய குற்றவாளிகளாக மாறி வெளியே வருகின்றனர். இந்த இடத்தில்தான் வாழும் கலை போன்ற அமைப்புகள் சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் மனதை மாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன என்பதைக் கண்டறிந்தேன். ஆனால் என்னால் அதனைச் செய்ய முடியாது.

கிட்டத்தட்ட 70 நாட்கள் மட்டுமே நான் அந்தப் பணியில் இருந்தேன். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மூன்று முறை சென்றுள்ளேன். அப்போது, காலையில் இருந்து மாலை வரை அங்கேயே இருந்தேன். அப்போது, ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நான் சொல்வதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சிறைச்சாலைக்கு வருவதைப் பார்த்தேன். அவர்கள், சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள், அவர்களது தாய் ஆகியோரது வாழ்க்கை மேம்பட உதவுகின்றனர். இதுபோன்ற விஷயங்களை, வாழும் கலை போன்ற அமைப்புகளும் எடுத்துச் செயலாற்ற முடியும்” என பேசி முடித்தார்.

click me!