
தமிழக எம்.பி.களின் பெயர்களின் பின்னால் சாதி இல்லாததால் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தனித்து நிற்கிறோம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரியில் திருமண விழா ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். இந்த விழாவில் ஆ.ராசா பேசுகையில், “பக்தி என்பது மனிதனை பக்குவப்படுத்துவதற்காக அல்ல. ஓர் இனம் வாழ்வதற்காக இந்து மதம் என்ற பெயரால் மிகப் பெரிய அரசியல் நடந்துக்கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அருந்ததியர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அனைவருமே மேலே வர வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு உண்டு. அந்த வகையில் பார்த்தால், முதல்வர் ஸ்டாலினை ‘பெரியாரியவாதியா, அண்ணாவாதியா, கலைஞர் போன்ற வீரியம் போல இருப்பாரா’ என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் கருப்புச்சட்டைக்காரர்கள்.
ஆனால், இன்றைக்கு திமுகவினரும் வாயடைக்கும் வகையில் பெரியாரின் கொள்கையைத் தூக்கி பிடிக்கிற மகத்தான தலைவாராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார். திமுகவின் இந்த ஆட்சிக்காலத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், அம்பேத்கர் கொள்கையை அதிகம் பரப்புவோம். மார்க்சீயத்தையும் தூக்கிபிடிப்போம். தமிழக எம்பிக்களின் பெயர்களின் பின்னால் சாதி இல்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் தனித்து நிற்கிறோம். பெரியாரின் கொள்கை வாழவேண்டும். சாதிமறுப்பு திருமணங்கள் தமிழகத்தில் அதிகம் நடைபெற வேண்டும்” என்று ஆ.ராசா பேசினார்.