தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்குமா சிவசேனா? குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கி மகாராஷ்டிரா...

By Selvanayagam PFirst Published Nov 12, 2019, 7:34 AM IST
Highlights

ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கடிதத்தை அளிக்க சிவ சேனா தவறியதால்,  அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை தேசியவாத காங்கிரசுக்கு மகாராஷ்டிரா கவர்னர் வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பெரும்பான்மை இடங்களை (161) இடங்களை கைப்பற்றியது. 

இதனையடுத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட நிலையில், முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால்தான் ஆதரவு கொடுப்போம் என சிவ சேனா கூறியது. இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதற்கிடையே பழைய அரசின் ஆட்சி காலம் கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிந்தது.

இதனையடுத்து தேர்தலில் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க வருமாறு அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யரி அழைப்பு விடுத்தார். ஆனால் எங்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்று பா.ஜ.க. கவர்னரிடம் தெரிவத்தது. 

இதனையடுத்து தேர்தலில் அதிக இடங்களை வென்ற இரண்டாவது பெரிய கட்சியான சிவ சேனாவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். சிவ சேனாவும் திங்கட்கிழமை (நேற்று) இரவு 7.30 மணிக்குள் தங்களது நிலைப்பாட்டை கூறுவதாக தெரிவித்தது. மேலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் ஆதரவு கேட்டது.அந்த கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேச வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்தது. இதனால் அந்த கட்சிகளிடம் ஆதரவு கடிதத்தை குறிப்பிட்ட நேரத்துக்குள் சிவ சேனாவால் பெற முடியவில்லை. இதனையடுத்து நேற்று இரவு கவர்னரை சந்தித்த சிவ சேனா தலைவர்கள் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை கொடுத்தனர். 

மேலும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்,ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளிக்க சில நாட்கள் அவகாசம் வேண்டும் என கவர்னரிடம் சிவ சேனா கோரிக்கை விடுத்தது.  ஆனால் அதனை கவர்னர் ஏற்க மறுத்து விட்டார்.

மேலும், தேர்தலில் அதிக இடங்களை வென்ற 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசை ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். 

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் அஜித் பவார் கவர்னர் பகத் சிங் கோஷ்யரியை சந்தித்தார். அப்போது கவர்னர், அஜித் பவாரிடம் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விருப்பம் இருக்கிறாதா மற்றும் முடியுமா என்பதை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கும்படி கூறினார். 

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தேசியவாத காங்கிரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் ஆனால் சிவ சேனா ஆதரவு அளிக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஒருவேளை ஆதரவு அளிக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்வார்

click me!