அதிமுக அமைச்சரை அடித்து நொறுக்கியிருப்பேன்.. தேமுதிக இலக்கிய அணி செயலாளர் ஆவேசம்.. கூட்டணியில் விரிசல்.

By Ezhilarasan BabuFirst Published Dec 21, 2020, 12:26 PM IST
Highlights

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. 

கேப்டன் விஜயகாந்த்தை கைநீட்டி பேசிய அதிமுக அமைச்சரை அப்போதே அடித்து நொறுக்கியிருப்பேன் என நடிகரும் தேமுதிக இலக்கிய அணி செயலாளருமான ராஜேந்திரநாத்  பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்ற வீயூகங்களிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதே அதிமுக மற்றும் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு  ஒரு ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்படுமென அதிமுக தரப்பில் வாய்மொழியாக கூறப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அப்படி எதுவும் வழங்கப்படாதது அதிமுக மீது தேமுதிக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்க உள்ள நிலையில், தேமுதிக  மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும், விஜயகாந்தை முதலமைச்சராக்குவோம் என்றும் ராஜபாளையத்தில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 10ஆம் தேதி ஆண்டிபட்டியில் நடந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 234 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட தயார் என கூறியுள்ளார். அப்படியெனில் அதிமுக கூட்டணியை தேமுதிக கைகழுவு போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில்  டிசம்பர் 14ஆம் தேதி சென்னையில் உள்ள தேமுதிக  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கடந்த முறை தேர்தலில் செய்த தவறுகளை இந்த முறை செய்யக்கூடாது எனவும், இது தேமுதிகவுக்கு மிகவும் நெருக்கடியான தேர்தலாக இருக்கும் என்றும், யார் தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணியில்  இடம் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது அதிமுகவுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரநாத், அதிமுக தேமுதிக கூட்டணிக்கு  இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதாவது கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கேப்டன் விஜயகாந்த் எனக்கு சீட் தந்து, நான் எம்எல்ஏ ஆகியிருந்தால் சட்டமன்றத்தில் கேப்டனை கைநீட்டி பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அப்போதே அடித்து நொறுக்கி இருப்பேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

இதற்கு தேமுதிக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர். இதனால் அதிமுக தேமுதிக கூட்டணி இடையே கருத்து இலைமறைகாயக இருந்த கருத்துவேறுபாடு விரிசலாக மாறியுள்ளது. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!