நானும் அரசியலுக்கு வருவேன்... கட்சியின் பெயர் புதிய பாதை... அதிரடியாக அறிவித்த ஆர். பார்த்திபன்..!

By Asianet TamilFirst Published Dec 15, 2020, 10:30 PM IST
Highlights

எதிர்காலத்தில் நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவேன் என்று இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் தெரிவித்துள்ளார். 
 

புதுச்சேரியில் ஆண்டுதோறும் அரசு சார்பில் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழாவில் சிறந்த படமாக இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' தேர்வானது. இதற்கான விருதைப் பெற்றுக்கொண்டு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசினார்.  “எப்போதும் ரொம்ப கூல் ஆக இருந்தால் வெற்றி பெற முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் கஷ்டப்பட்டுதான் வெற்றி பெற்றேன். நடிக்க ஆசைப்பட்டுதான் சினிமாவுக்குள் வந்தேன். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்தே இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளரானேன்.

 
உண்மையில் எனக்குத் தன்னம்பிக்கையை வளர்த்தது என்னுடைய அப்பாதான். தொடக்கத்தில் என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஆனால், நான் சினிமாவில் வெற்றி பெறுவேன் என்று என்னுடைய அப்பா நம்பினார். என் அப்பா ஒரு போஸ்ட்மேன். அதனால்தான் 'தாவணிக் கனவுகள்' படத்தில் போஸ்ட்மேனாக நடித்தேன். அவர்  புற்றுநோய் வந்து கஷ்டப்பட்டார். நான் முன்னுக்கு வருவேனா என்ற குழப்பம் எனக்கு இருந்தது. நிறைய அப்பாக்களின் கனவே, தன் பிள்ளையை உயரத்தில் வைத்து பார்க்க என்று ஆசைப்படுவதுதான். என் பூஜை அறையில் உள்ள ஒரே சாமி படம், என் அப்பாவின் போட்டோதான்.


சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும் கலையின் மீது எம்ஜிஆர், கருணாநிதிக்கு ஈடுபாடு இருந்தது. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், இன்று அரசியலுக்கு வந்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். நான் கூட புதிய கட்சியை தொடங்கலாமா என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை.” என்று பார்த்திபன் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பார்த்திபன் பேசும்போது, “ஏற்கனவே இங்கே நிறையக் குழப்பம். நான் வேறு ஏதாவது சொல்லிக் குழப்ப வேண்டுமா? தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று மக்களும் குழப்பமாகவே இருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சியை தந்திருக்கிறார்கள். அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர்கள் என்பதால் நாம் ஒதுக்கத் தேவையில்லை. எனக்கும் அரசியல் ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக நான் அரசியலுக்கு வருவேன். நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும்  வரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
 

click me!