ஓ.பி.எஸ். அணியில் இருந்து வெளியேறிவிட்டேன்: எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பேட்டி

First Published Jul 21, 2017, 3:01 PM IST
Highlights
I am out of the O.P.S team MLA Arukutti


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடனமாடி வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டவர் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி. தன்னை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து வந்ததால் அதிருப்தியில் இருந்துள்ளார் ஆறுகுட்டி. இந்த நிலையில் இன்று கோவை கொடிசியா மைதானத்தில் புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கான பூமி பூஜை ஓ.பி.எஸ். அணி சார்பில் நடைபெற்றது. இந்த விழாவை அதிருப்தி காரணமாக ஆறுகுட்டி புறக்கணித்துள்ளார். 

இந்த நிலையில் ஆறுகுட்டி எம்.எல்.ஏ., நாளை திருப்பூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைவதாக தகவல் வெளியானது. இதற்கு எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். 
கோவை, கவுண்டம்பாளையத்தில், ஆறுகுட்டி எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகிவிட்டேன். மீண்டும் இணையமாட்டேன். நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. தொகுதி மக்களை மட்டுமே நம்பியுள்ளேன்.

எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்லமாட்டேன். சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அதிமுக இரு அணிகள் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். இரு அணிகளும் இணைவது பற்றி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவு செய்ய வேண்டும்.

அப்படி சந்தித்து பேசினாலே பிரச்சனை தீர்ந்துவிடும். இணைப்பு தொடர்பான யோசனையை ஓ. பன்னீர்செல்வம் புறக்கணித்து வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காமல் புறக்கணித்து வருகிறார். அதனாலேயே நானும் அவர்களை புறக்கணிக்கிறேன். என்னுடைய நிலை மாற வாய்ப்புள்ளது.

எனது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கும், நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

அணி மாறுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் எங்கிருந்தாலும் விசுவாசமாக இருப்பேன். மக்களைக் கேட்டுத்தான் அணி மாறினேன். கடந்த இரண்டு நாட்களாக தொகுதி மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறேன். அவர்களை சந்தித்துவிட்ட பிறகு தான் உங்களுக்குத் தெரிவிப்பேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!