அன்றாடம் காய்ச்சியான ஜே.கே.ரித்திஷ் பல ரூறு கோடிகளுக்கு அதிபதியானது எப்படி..?

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2019, 5:52 PM IST
Highlights

தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணம்புரள ஆரம்பித்த உடன் ரித்திஷ் ஆகி எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்த்தார். அடுத்து திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். திமுகவில் சீட் வாங்கி எம்.பியானார். 

பாரம்பரியமான திமுக குடும்பமாக இருந்தாலும் முகவை குமார் இராமநாதபுரத்தில் அன்றாடம் காய்ச்சியாகதான் இருந்தார். தூரத்து சொந்தமான தாத்தா சுப.தங்கவேலன் திமுக கட்சியின் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைச்சராகவும் சக்தி வாய்ந்த நபராக இருந்தாலும் முகவை குமாருக்கும் தூரத்து சொந்தமான தாத்தாவுக்கும் தொடர்பு கிடையாது.

சொந்த ஊரில் பஸ்ஸுக்கு காசில்லாமல் நடந்துபோன கதையெல்லாம் முகவை குமாருக்கு உண்டு. வறுமை விரட்ட சென்னையில் போய் ஏதாவது பிழைப்பு நடத்தலாம் என்று இராமநாதபுரத்திலிருந்து பஸ் ஏறியவருக்கு கோடம்பாக்கம் அடைக்கலம் கொடுத்தது. ஊரிலிருந்து சினிமாவுக்காக கோடம்பாக்கம் வந்த நண்பர்களிடம் தஞ்சம் புகுந்த குமாருக்கு,‘ எந்த வேலை செய்வது’ என்கிற குழப்பத்திலேயே காலம் வேகமாக சுழன்றது.

சினிமா வாய்ப்பு தேடி கிடைக்காமல் போனவர் வெளிநாடுகளில் இருந்து வந்து ஷூட்டிங் பார்க்க ஆசைப்படுபவர்களை அழைத்து செல்லும் வேலையை முழுநேரமாக்கிக் கொண்டார். ஊரிலிருந்த தி.மு.க தொடர்பு மற்றும் தூரத்து சொந்தமான தாத்தா சுப.தங்கவேலனின் பேரும் முகவை குமாருக்கு பெரிய அளவில் கைக்கொடுத்தது. தி.மு.க.கட்சியில் அப்போது தீவிரமாக ஈடுபட்ட சரத் குமார், இப்போதைய மத்திய அமைச்சர் நெப்போலியன், தியாகு, வாகை சந்திரசேகர் போன்ற நடிகர்களைக் கட்சியின் பெயர் சொல்லி, முகவை குமாரால் எளிதில் அணுக முடிந்தது. தாத்தா மாநில அமைச்சர் என்பதும் மிகப் பெரிய பலமாக இருந்து தட்டிய கதவெல்லம் திறந்தது. பெரிய உழைப்பில்லாமல் வாழ்வதற்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க இந்த தொழில் நன்றாகவே கைக்கொடுத்தது. 

காலம் கைக்கூடி வரும் என்பதற்கு சாட்சியாக மலேசிய பிரதமருக்கு மிகநெருக்கமான இருந்த ஒரு தமிழர் சென்னைக்கு வந்தார். மலேசிய அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு உடைய அவருடைய குடும்பத்தினருக்கு சினிமா ஆர்வம் அதிகம். திரை நட்சத்திரங்களை நேரில் பார்ப்பதற்காக எட்டு வருடத்திற்கு முன்பு சென்னையில் ஒரு வார காலம் முகாமிட்டது மலேசிய முக்கிய பிரமுகரின் குடும்பம். அப்போது சரத்குமார் கொஞ்சம் பரபரப்பான நடிகாரகவும் இருந்தார். அந்த நேரத்தில் சரத்குமார் உள்ளிட்ட சிலரை சந்திக்க வைத்ததோடு, திரை நட்சத்திரங்களோடு உணவருந்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார். மலேசிய பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து கவனித்த முகவை குமாருக்கு அடுத்த அதிர்ஷ்டம் அப்போதே அடித்தது.

முக்கிய பிரமுகரின் கடைசி மகனுக்கு கால் இடறி எலும்பு முறிவு ஏற்பட்டது சுவாரஸ்யமான கதையின் அடுத்த திருப்பம். மேலும் ஒரு வார காலம் தன்னுடைய பயணத்தை நீட்டிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார் மலேசிய பிரமுகர். எல்லா வேலையையும் விட்டுவிட்டு கால்முறிவு சிறுவனுக்கு முழுநேர கவலாக இருந்து அக்கறையோடு பார்த்துக்கொண்டார் முகவை குமார். அப்போது முக்கிய பிரமுகருக்கும் குமாருக்கும் நெருக்கம் அதிகரித்தது. தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் கடுமையாக உழைக்கிற குமாருக்கு கைமாறாக ஏதாவது செய்யவேண்டும் என்ற நினைப்பு விதையாக பிரமுகர் மனதில் விழுந்துள்ளது.

கைமாறு சர்க்கரையாக மாறி முகவை குமார் வாழ்க்கையில் பெரிய வசந்தத்தை ஏற்படுத்தியது என்கிறார்கள் அவரின் அடிப்பொடிகள். இந்தியாவிலிருந்து மலேசியாவுக்கு 200டன் சர்க்கரையை இறக்குமதி செய்யும் பொறுப்பு முக்கிய பிரமுகரிடம் வந்து சேர்ந்தது. உதவிக்குக் கைமாறாக சர்கரையை இறக்குமதி செய்கிற வேலை முகவைகுமார் மூலமாக நடைபெற்று கணிசமான தொகையைப் பரிசாகப் பெற்றார் முகவை குமார். அதுவரை அன்றாடம் காய்ச்சியாக வாழ்வை நகர்த்தியவருக்கு சொகுசு வாசலுக்கே வந்தது.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தைத் தொடுவதற்காக காலம்கனிந்த ஒரு நேரத்தில் தனக்கு கிடைத்தப் பணத்தை முதலீடாக போட்டு பல இடங்களில் இடங்களை வளைத்தார் முகவை குமார். ஒரு ரூபாய் போட்டால் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற பணம் காய்க்கும் மரமாக ரியல் எஸ்டேட் தொழில் ராக்கெட் வேகத்தில் சீறிபாய்ந்தது. தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணம்புரள ஆரம்பித்த உடன் ரித்திஷ் ஆகி எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்த்தார். அடுத்து திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். திமுகவில் சீட் வாங்கி எம்.பியானார். 

click me!