காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் ஷாக்கான மாணவர்கள் !!

By Selvanayagam PFirst Published Oct 14, 2019, 10:20 AM IST
Highlights

குஜராத் தனியார் பள்ளிகள் நடத்திய உள் மதிப்பீட்டு தேர்வில் காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் சுபலம் ஷா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு அந்த பெயரில் சுயநிதி பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும் அது மாநில அரசின் மானியத்தை பெற்று வரும் கல்வி அமைப்பாகும். 

சுபலம் ஷா விகாஸ் சங்குல் பள்ளிகளில் கடந்த சனிக்கிழமையன்று தேர்வு நடைபெற்றது. 9 வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வில், மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. 

காந்தியை நாதுராம் கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான் என்பது இந்த உலகமே அறியும். அப்படி இருக்கையில் அவர் எப்படி தற்கொலை  செய்து கொண்டார் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வில், உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதும் குறித்தும், சட்டவிரோத நபர்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்தும் மாவட்ட தலைமை காவலருக்கு எப்படி புகார் கடிதம் எழுதுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. 

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளநிலையில், மதுவிற்பனை அதிகரிப்பு குறித்து புகார் கடிதம் எழுதும்படி கேள்வி கேட்டு இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த குஜராத் கல்வி அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது போன்ற அபத்தமான கேள்விகள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை என்றும் இதன் பின்னால் யாருடைய தூண்டுதலும் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக குஜராத் மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!