வலை விரிக்கும் பாஜக..! எதிர்கொள்வது எப்படி? சீனியர்களுடன் சீரியசாக பேசிய எடப்பாடியார்..!

By Selva KathirFirst Published Aug 12, 2021, 11:33 AM IST
Highlights

இந்த இரண்டில் இருந்தும் ஒரே நேரத்தில் தப்பிக்க வேண்டும் என்றால் பாஜகவில் இணைவது தான் சரியாக இருக்கும் எனப்தை அதிமுக சீனியர்களுக்கு உணர்த்தவே இந்த சம்மன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி தற்போது வரை சென்னை திரும்பவில்லை. 

அதிமுகவின் சீனியர் தலைவர்களை குறி வைத்து பாஜக வலை விரித்து வரும் நிலையில் அவர்களை எதிர்கொள்வது எப்படி என எடப்பாடியார் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி சுமார் முன்னாள் அமைச்சர்கள் பத்து பேருக்கு வருமான வரித்துறையிடம் இருந்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த சம்மன் வழக்கமான சம்மன் தான் எனவும், ஒப்பந்தங்கள் எடுத்து செய்து வரும் ஒப்பந்ததாரர்கள், ஏஜென்டுகள் போன்றோருக்கு சம்மன் அனுப்பி வைப்பது வருமான வரித்துறையின் வழக்கம். இதே போல் முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட வருமான வரித்துறையிடம் வரவு செலவு தொடர்பான சிக்கல்களுக்காக வழக்குகளை எதிர்கொள்வதும் வாடிக்கை தான்.

ஆனால் இந்த முறை வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருப்பது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்கு செல்லக்கூடியது என்கிறார்கள். வருமான வரித்துறை விசாரணை என்பது கைது நடவடிக்கைக்கு உட்படாதது. அதே சமயம் இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் சென்றால் கைது நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்கிறார்கள். எனவே தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக, தற்போது அதிமுகவில் செல்வாக்குள்ள தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது. ஒரு பக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ஆளும்  தமுக அரசு நெருக்கடி கொடுக்கும் நிலையில் வருமான வரித்துறை மூலமான  நெருக்கடியை கடந்து அமலாக்கத்துறை நெருக்கடிக்கும் அவர்கள் ஆளாக நேரிடும் என்கிறார்கள்.

இந்த இரண்டில் இருந்தும் ஒரே நேரத்தில் தப்பிக்க வேண்டும் என்றால் பாஜகவில் இணைவது தான் சரியாக இருக்கும் எனப்தை அதிமுக சீனியர்களுக்கு உணர்த்தவே இந்த சம்மன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி தற்போது வரை சென்னை திரும்பவில்லை. அவர் தனது வழக்குகள் தொடர்பாக சீனியர் வழக்கறிஞர்களை சந்திக்கவே அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பாஜகவின் சில சீனியர்களை சந்தித்து பேசியுள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனும் டெல்லி சென்றுள்ளார். அவர் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரும் கூட இரண்டு மூன்று நாட்களாக டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். வழக்கு போன்ற விஷயங்களில் சிக்காமல் இருக்க பாஜகவில் ஐக்கியமாகவே அவர் டெல்லி சென்றுள்ளதாகவும், இதற்காக வெங்கய்ய நாயுடு மூலம் அவர் முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த கையோடு, சீனியர்கள் ஓபிஎஸ், தங்கமணி, வேலுமணியுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கூட எதிர்கொண்டு விடலாம், ஆனால் மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலமான நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக சீனியர்களை குறி வைத்து பாஜக காய் நகர்த்துவதை எப்படி முறியடிப்பத என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

click me!