
எடப்பாடி முதல்வராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, அவருக்கு அதிகம் நெருக்கடி கொடுத்து வருவது, அவரது கொங்கு சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்தான்.
அதிலும், கரூர் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலத்தை கூட கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனை சமாளிக்க முடியாமல்தான் அவர் அதிகம் திணறி வருகிறார்.
சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்பதால், இளவரசி மகன் விவேக்குடன் நட்பில் இருக்கும், அவரது மகன் எழில்மாறன் மூலம் பழனியப்பனை அவர் கொஞ்சம் சமாதானம் செய்து வைத்திருக்கிறார்.
இருந்தாலும், அதிமுகவின் 30 எம்.எல்.ஏ க்கள், பழனியப்பன் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும், தமது வீட்டிற்கு வரவழைத்து ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தி இருக்கிறார் பழனியப்பன்.
அப்போது, அதில் பங்கேற்ற இருவர், தேவையான செலவு அனைத்தையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம், நீங்கள் முதல்வர் பதவியில், அமர முயற்சி செய்யுங்கள் என்று கூறி இருக்கின்றனர்.
ஆனாலும், சசிகலாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, ஆட்சிக்கு இடையூறு வந்துவிட கூடாது என்று பொறுமையாக இருக்கிறேன் என்று பழனியப்பன் கூறி இருக்கிறார்.
மேலும், எடப்பாடி கமிஷன் ஆட்சி நடத்துகிறார் என்றும், ஒன்றும் இல்லாதவர்களுக்கெல்லாம் அமைச்சரவையில் இடம் கொடுத்திருக்கிறார் என்று கோபத்தில் பொரிந்து தள்ளி இருக்கிறார்.
அதேபோல், அனைத்து துறைகளிலும் தமக்கு வேண்டிய அதிகாரிகளை எடப்பாடி நியமித்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் பழனியப்பன் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதை அறிந்த முதல்வர் எடப்பாடி மிகவும் கொதித்து போயிருக்கிறார். பழனியப்பன் மூலம் ஆட்சிக்கும், தமது முதல்வர் பதவிக்கும் ஆபத்து வந்துவிடும் என்ற அச்சம் அவருக்கு தொற்றிக்கொண்டுள்ளது.
இதை எப்படி தடுப்பது? என்று யோசித்த எடப்பாடிக்கு, அதிமுக அமைச்சர்களோ, எம்.எல்.ஏ க்களாலோ, பழனியப்பனை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்ததால், பாமக மூலம் அவருக்கு செக் வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
பாமக கோட்டையான, பாப்பி ரெட்டிபட்டியில், தேர்தலின் போது, பல ஊர்களில் பழனியப்பனை உள்ளே விடாமல் துரத்தி, துரத்தி அடித்தனர் பாமகவினர்.
தேர்தல் முடிவு வெளியான நாள் அன்று கூட, கடைசி வரை 13 ஆயிரம் வாக்குகள் வரை பின்தங்கி இருந்த பழனியப்பன், கடைசி ஒருமணி நேரத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை கவனத்தில் எடுத்து கொண்ட எடப்பாடி, மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள பாமக தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மூலம், பழனியப்பனுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக ஒன்றுக்கு மட்டுமே அஞ்சும் பழனியப்பனை, அவர்களை வைத்தே ஓட, ஓட விரட்ட முடிவு செய்து, உள்ளூர் பாமக புள்ளிகளிடம், எடப்பாடியின் ஆட்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
அதற்கு, பழனியப்பனை துரத்தி அடிப்பது எங்களுக்கு பெரிய விஷயம் அல்ல. ஆனால், மேலிடத்தில் அதை பேசி முடிவு செய்யுங்கள், அங்கிருந்து உத்தரவு வந்தால், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று உள்ளூர் புள்ளிகள் கூறி இருக்கின்றனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டதில் இருந்தே பழனியப்பன் கொஞ்சம் அடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பாமக மேலிடம் உத்தரவு கொடுத்தால், பழனியப்பன் பாடு திண்டாட்டம்தான் என்கின்றனர் அப்பகுதி அதிமுகவினர்.