DMK Vs BJP | 17 மாநிலங்களில் எப்படி ஆட்சிக்கு வந்தீங்க.? அண்ணாமலையை டாராக கிழித்த தயாநிதி மாறன்..!

By Asianet TamilFirst Published Dec 12, 2021, 10:08 PM IST
Highlights

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்தார்கள். இதேபோல் கர்நாடகாவிலும் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்துதான் இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள்.

பாஜக 17 மாநிலங்களில் எப்படி ஆட்சிக்கு வந்தது எப்படி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை திமுக எம்.பி. தயாநிதி மாறன் விமர்சனம் செய்தார். 

திமுக அரசை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த தீவிர வலதுசாரி ஆதரவாளரும் யூடியூபருமான மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர். மாரிதாஸ் கைதுக்கு தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாரிதாஸ் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்தியாவில் 17 மாநிலங்களில்தான் ஆட்சி செய்கிறோம். எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு.” என்று தெரிவித்திருந்தார். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம் என்று அண்ணாமலை சொன்னதற்கு சமூக ஊடகங்களில் திமுக கூட்டணி கட்சியினர் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனும், கடுமையாக விமர்சித்துள்ளார். 

Latest Videos

சென்னையில் செய்தியாளர்களை தயாநிதி மாறன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கர்நாடகாவில் பாஜக ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஆளும் பாஜக அரசை எதிர்த்து பேசினாலோ அல்லது முதல்வரை விமர்சித்தாலோ சிறைச்சாலைதான். கர்நாடகாவில் மட்டுமல்ல,  பாஜக ஆட்சி நடக்கக்கூடிய எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான்  நடைபெறுகின்றன. இதையெல்லாம் எதிர்த்து அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு முதலில் பாஜகவினர் பதில் சொல்லட்டும். 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம் என்கிறார் அண்ணாமலை. எவ்வாறு அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? சட்டப்பேரவை உறுப்பினர்களை மிரட்டியும் வருமான வரித் துறையினரை வைத்து மிரட்டியும் சிபிஐ வைத்து மிரட்டியும்தான் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். பாஜகவினர் முழுக்க குதிரை பேரம் நடத்தி கொல்லைப்புறமாக வந்துதான் ஆட்சியை பிடிக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்து ஆட்சியைப் பிடித்தார்கள். இதேபோல் கர்நாடகாவிலும் குமாரசாமி ஆட்சியைக் கவிழ்த்துதான் இவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள். இப்படித்தான் அவர்கள் ஆளும் 17 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறார்கள். முதலில் அவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். பாஜகவினர் மற்றவர்களைக் குறை கூறுவதை மட்டுமே ஒரு தொழிலாக வைத்துள்ளார்கள்.” என்று தயாநிதி மாறன் கடுமையாக சாடினார்.
 

click me!