ஸ்டாலின் கட்சி இந்து விரோதி மட்டுமில்லை, இந்திய விரோத கட்சியும்தான்! நடிக்கிறாங்க சார்!: போட்டுப் பொளக்கும் இந்து முன்னணி

By Kanimozhi PannerselvamFirst Published Jan 9, 2020, 2:32 PM IST
Highlights

இது வெறும் நடிப்புதான். இந்த திடீர் நிற மாற்றத்தை இந்துக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவார்களா என்ன?” என்று வெளுத்திருக்கிறார்

இன்று நேற்றல்ல கருணாநிதியின் காலத்தில் இருந்தே தி.மு.க. தன்னை சிறுபான்மையின மக்களின் காவலனாகவே காட்டி வந்து கொண்டிருக்கிறது. அதிலும் இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அதை எதிர்ப்பதில் முன் வரிசையில் நிற்கும் தி.மு.க. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. முரண்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களின் இந்துத்வ நடவடிக்கைகள் என்பதை காட்டிலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளே! என்பது ஒரு தரப்பு விமர்சகர்களின் கருத்து. 
ஆனால் மற்றொரு தரப்பு விமர்சகர்களோ ’தி.மு.க. இஸ்லாமிய நண்பன்! இந்துக்களின் விரோதி!’ என்று போட்டுத்தாக்குகிறார்கள். இதற்கான காரணத்தை சொல்வோர்.......இதனால்தான் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ சேனலான கலைஞர் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற  இந்துக்களின் பண்டிகைகளை ‘விடுமுறை நாள்! விழா நாள்!’ என்று குறிப்பிடுபவர்கள், முஸ்லிம்களின் பண்டிகைகளை மட்டும் ‘ரம்ஜான்! பக்ரீத்!’ என்று பெயர் சொல்லி குறிப்பிடுவார்கள். ஸ்டாலின் வாழ்த்துவதும் இஸ்லாமியர்களின் விழாக்காலங்களில்தான். தங்களை வெளிப்படையான இந்து விரோதியாகத்தான் அக்கட்சி காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் இஸ்லாமியர் மற்றும் கிறுத்தவர்களின் வாக்கு வங்கியை மிக பெருமளவில் வளைப்பதுதான் தி.மு.க.வின் உள்நோக்கம்! என்கிறார்கள். 

சூழல் இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க. இளைஞரணியின் மாநில செயலாளரான உதயநிதி சமீபத்தில் ‘இடஒதுக்கீட்டின் மூலம் இந்துக்களுக்கான உரிமையை உறுதி செய்வதும், அறநிலையத்துறை மூலம் ஆலயங்களுக்கு குடமுழக்கு நடத்தி அவற்றின் சொத்துக்களைப் பாதுகாத்ததும் தி.மு.க.தான். இன்றைய சூழலில் இந்துக்களின் உண்மையான எதிரி யார்? என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்.’ என்று ஒரு ட்விட் போட்டிருந்தார். இது அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்களை ஆச்சரியமும், அதிர்ச்சியும் படுத்தியது. ஏனென்றால், என்ன திடீரென தி.மு.க. தன்னை இந்துக்களின் நண்பனாக காட்டிக் கொள்ள பார்க்கிறது! என்கிற கேள்விதான். அதற்கு அவர்களே சொல்லிக் கொண்ட பதில்....’தி.மு.க. இப்போது அரசியல் கன்சல்டன்ட் பிரஷாந்த் கிஷோரின் வழிகாட்டுதல் படி நடக்கிறது. அவர்தான் இந்துக்களையும் அரவணைத்து அரசியல் செய்யுங்கள்! என சொல்லியுள்ளார். அதன்படியே இந்த முடிவை எடுத்துள்ளனர்.’ என்றனர். 

இந்த நிலையில் தி.மு.க.வின் இந்த திடீர் இந்து பாசத்தை விளாசும் இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவரான வி.பி.ஜெயக்குமார் “என்னவாம் திடீரென அந்தக் கட்சியின் கண்களில் இந்துக்களும் கூட விழ துவங்கிவிட்டார்கள்?! தி.மு.க. ஒரு இந்து விரோத கட்சி மட்டுமல்ல. இந்திய விரோத கட்சியும் கூட. நம் நாட்டின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்ப்பதன் மூலம் இந்திய விரோதக் கட்சி என்பதை வலியுறுத்தி நிரூபித்து வருகிறது தி.மு.க. குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டிவிட்டு போராட்டத்தை முன்னின்று நடத்திய அக்கட்சிதான். இதனால் இந்துக்களின் மத்தியில் தன் செல்வாக்கு, பெயர் எல்லாவற்றையும் இழந்துள்ளார் ஸ்டாலின். தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றியெல்லாம் பெறவில்லை. ஆளுங்கட்சிக்கும் இவர்களுக்கும் உள்ள வெற்றி வித்தியாசமெல்லாம் பல ஆயிரக்கணக்கான பதவிகளில் வெறும் பத்து, இருபது அளவுதான். இவர்களின் வாக்கு வங்கி குறைய காரணம் இந்துக்கள்தான். தி.மு.க. மீது கடும் வெறுப்பில் உள்ளனர் இந்துக்கள். இதை உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் மூலம் உணரத்துவங்கிவிட்ட தி.மு.க., இப்படி இந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது வெறும் நடிப்புதான். 
இந்த திடீர் நிற மாற்றத்தை இந்துக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிவிடுவார்களா என்ன?” என்று வெளுத்திருக்கிறார். 

click me!