மக்களே உஷார்!! இனி தான் கூடுதல் கவனம் தேவை... சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 03, 2021, 12:01 PM IST
மக்களே உஷார்!! இனி தான் கூடுதல் கவனம் தேவை... சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை...!

சுருக்கம்

கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் அரசு கொடுத்துள்ள தளர்வுகளை முறையான கட்டுப்பாடுகளுடன் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.   

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:  கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே சுகாதாரத்துறை அமைச்சர் கடலூரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். 

நேற்றைய தினம் கொரோனாவால்  4 ஆயிரத்து 230 பேர் மட்டுமே பாதிக்கபட்டுள்ளனர். 25 மாவட்டங்களில் நோய் தொற்று நாளொன்றுக்கு 100-ஐ விட குறைவாக பதிவாகியுள்ளது.13 மாவட்டங்களில் 100 முதல் 500 வரை மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தளர்வுகளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டுமென்றால்,  பொதுமக்கள் தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, பொது இடங்களில் எச்சில் உமிழ்வது, கைகழுவுதல், நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி அமர்த்துவது போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். கடந்த முறை மக்கள் அலட்சியமாக செயல்பட்டதால் தான் கொரோனா 2வது அலை தீவிரமடைந்தது. 

கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்ட 43 ஆயிரத்து 745 படுக்கைகளில் 3,282 பேர் மட்டுமே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!