கடவுள் என்று சொன்னதும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் பதறுகிறார்..? ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி

By karthikeyan VFirst Published Jun 22, 2020, 7:51 PM IST
Highlights

கொரோனா எப்போது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வியெழுப்பி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 
 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் தமிழகத்தில் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. கடந்த சில நாட்களாக, தினமும் சராசரியாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. 

கொரோனா தடுப்பு பணிகள், கொரோனா சிகிச்சை பணிகள், அதிகமான பரிசோதனைகள் என கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொரோனா தொற்றுள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை பணிகள் என அனைத்தையும் தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. 

இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகள்(9,19,204 பரிசோதனைகள்) செய்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. பரிசோதனைகளை அதிகரிக்க ஏதுவாக பரிசோதனை மையங்களையும் தமிழக அரசு அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் 87 கொரோன பரிசோதனை மையங்கள் உள்ளன. 

இவ்வாறு தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டாலும், தமிழக அரசின் செயல்பாட்டை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். அவருக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்தும் வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனா எப்படி கட்டுக்குள் வரும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் பழனிசாமி பதிலளித்திருந்தார். அரசு சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படுகிறது. ஆனாலும் செய்தியாளரின் கேள்விக்கு, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. எனினும் கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க உலக விஞ்ஞானிகளே திணறிவரும் நிலையில் அதை துல்லியமாக சொல்ல முடியாது என்பதுதான் நிதர்சனம். எனவே கடவுளுக்குத்தான் தெரியும் என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்திருந்தார் முதல்வர் பழனிசாமி. 

உடனே, முதல்வரின் கருத்தை விமர்சித்திருந்த ஸ்டாலின், இறைவன் மீது பழியையும் பாரத்தையும் ஏற்ற முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முயற்சிப்பதாக சாடியிருந்தார். முதலில் விமானம் மூலமாகவும், ரயில் வழியாகவும் வந்திறங்கிய பயணிகள் மீது பழி போட்டார்கள்; பிறகு கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது பழி போட்டார்கள்; அதற்கடுத்து மக்கள் மீதே பழி சுமத்தினார்கள்; இப்போது இறைவன் தலையில் பழியையும் பாரத்தையும் ஏற்ற முயற்சிக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலின் விமர்சனம் குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாமல் சர்வதேச அளவில் பெரிய பெரிய விஞ்ஞானிகளே திணறிவருகின்றனர். ஆனால் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்துவருகிறது. முதல்வர் பழனிசாமி, கடவுள் நம்பிக்கை கொண்டவர். எனவே, கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்று செய்தியாளர் கேட்டதற்கு, கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதிலளித்தார். அதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கடவுள் என்று சொன்னதும் ஏன் ஸ்டாலின் பதறுகிறார் என்றும் கேள்வியெழுப்பிய விஜயபாஸ்கர், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார். 
 

click me!