கூட்டணிக்கு முதலிலேயே போட்ட துண்டு.. பிறந்த நாளுக்கு முதல் நாளே வாழ்த்து.. ஓபிஎஸ்–ரஜினி கெமிஸ்ட்ரியின் பின்னணி

By Selva KathirFirst Published Dec 14, 2020, 11:04 AM IST
Highlights

ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்த அன்றே அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்கிற ரீதியில் ஓபிஎஸ் கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்ற நிலையில் ரஜினி பிறந்த நாளுக்கு முதல் நாளே வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் போட்ட ட்வீட் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்த அன்றே அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்கிற ரீதியில் ஓபிஎஸ் கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்ற நிலையில் ரஜினி பிறந்த நாளுக்கு முதல் நாளே வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் போட்ட ட்வீட் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

பத்து நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட ரஜினி அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிதாக கட்சி துவங்க உள்ளதாக அறிவித்தார். அதோடு டிசம்பர் 31ந் தேதி கட்சி துவங்கும் தேதியை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனது கட்சி எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பேசியிருந்தார். அன்றைய தினமே போடியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதோடு ரஜினி கட்சியோடு கூட்டணி வைப்பது குறித்து அதிமுக தலைமை பரிசீலிக்கும் என்கிற ரீதியில் ஓபிஎஸ் செய்தியாளர்களின் கேள்விக்கும் பதில் அளித்திருந்தார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் விவகாரத்தில் ஓபிஎஸ்சின் இந்த பேச்சு எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிருப்தி அடைய வைத்தது. ரஜினி கட்சிக்கு விளம்பரம் தேடித் தருவதுபோல் ஓபிஎஸ் செயல்பாடு இருப்பதாக எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிர்வாகிகள் புகார் அளிக்கும் அளவிற்கு சென்றது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது வெள்ளிக்கிழமை இரவே ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

ரஜினியின் தீவிர ஆதரவாளர்களாக இருக்கும் மாற்றுக் கட்சியினர், ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் மற்ற கட்சியினர் கூட இப்படி முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் ஓபிஎஸ் ரஜினிக்கு முதல் நாளே பிறந்த நாள் வாழ்த்து கூறியது ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவே என்கிறார்கள். எப்படியும் ரஜினிக்கு பிறந்த நாள் அன்று பிரதமர் மோடி தொடங்கி சாதாரண அரசியல் கட்சித் தலைவர்கள் வரை வாழ்த்து கூறுவார்கள். அன்றைய தினம் துணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்தால் அது பத்தோடு பதினொன்னாகிவிடும்.

எனவே தான் முதல் நாளே ஓபிஎஸ் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற வைக்கப்பட்டார் என்கிறார்கள். ரஜினி விவகாரத்தில் ஓபிஎஸ் தானாக செயல்படுவதில்லை என்றும் அவரை ஒரு நபர் இயக்குகிறார் என்றும் சொல்கிறார்கள். ஓபிஎஸ் மூலமாக ரஜினியின் இமேஜை டெவலப் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அதிமுக மேலிடமே தற்போது சந்தேகிக்கிறது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ரஜினியை சீரியசாக எடுத்துக் கொண்டது போல் காட்டிக் கொள்ள மறுக்கிறார். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், ரஜினியை மிகவும் சீரியசாக எடுத்துக் கொள்வது போல் காட்சிப்படுத்தப்படுகிறார்.

இதன் பின்னணியில் ரஜினியை அரசியல் களத்தில் வலுப்படுத்தும் திட்டம் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது அதிமுகவின் தனிப்பட்ட நிலைப்பாடு என்பதை தாண்டி, ஓபிஎஸ் தனது தனிப்பட்ட நிலைப்பாட்டை ரஜினி விவகாரத்தில் செயல்படுத்தி வருவது இதன் மூலம் தெரிய வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ரஜினி – ஓபிஎஸ் இடையிலான கெமிஸ்ட்ரி கூட்டணி என்பதையும் தாண்டி ரஜினியை மிகப்பெரிய அளவில் ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்க அரங்கேற்றப்படும் திட்டம் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

உதாரணத்திற்கு ரஜினிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிறந்த நாள் வாழ்த்து கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற எடப்பாடி விரும்பவில்லை என்றாலும் கூட ஓபிஎஸ கூறியதால் அவரும் கூற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு வாழ்த்து கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே ரஜினி பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்தத குறிப்பிடத்தக்கது.

click me!