சொன்னீங்களே செஞ்சீங்களா.? ஸ்டாலினும் உதயநிதியும் ஊர்ப்பக்கமா வந்தா சட்டையை பிடிங்க.. உலுக்கிய நடிகை விந்தியா!

By Asianet TamilFirst Published Jan 23, 2022, 9:54 PM IST
Highlights

திமுகவில் எழுதப்படாத விதி ஒன்னு இருக்கு. அது என்னான்னா, அப்பாக்கள் சட்டமன்றத்தில். பிள்ளைகள் நாடாளுமன்றத்தில். உறவுகள் ஊராட்சி மன்றத்தில். கமிஷன் புரோக்கர்கள் கவர்மெண்டில். திமுகவை மட்டும் நம்பி வாழும் தொண்டர்கள் நடுரோட்டில்.

திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவுங்க நிறைவேற்ற மாட்டாங்க. அவுங்களால நிறைவேற்ற முடியாது. நீட் ஒழிப்பு முதல் 7 பேர் விடுதலை வரைக்கும் திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவே முடியாது என்று அதிமுகவைச் சேர்ந்த நடிகை விந்தியா காரசாராமாக விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவரான நடிகை விந்தியாவின் காணொலி வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொலியில் விந்தியா பேசியிருப்பதாவது. “மாற்றம் தருவோம் மாற்றம் தருவோம் என்று சொல்லிவிட்டு. மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தரும் ஆளத் தெரியாத அரசுதான் இந்த அரசு. தாலி இல்லாமல் கல்யாணத்தை எப்படி நடத்துவது என்று கேட்டால், தாலி ஸ்டாக் இல்லை. நீங்க கல்யாணத்தை நடத்திடுங்க, நான் தாலி அப்புறம் வாங்கித் தரேன் என்று சொல்ற மாதிரி, பொங்கலை முடிச்சுட்டு பொங்கல் பரிசை வாங்கிங்க என்று அறிவிச்ச அரைகுறை அரசுதான் இந்த ஆளத் தெரியாத திமுக அரசு. இவர்கள் வறுமையை செழுமையாகவும் துன்பத்தை இன்பமாகவும், சாதாரண ஆட்சியை சிக்ஸராகவும் மாற்றக்கூடிய வித்தைக்காரங்கன்னு நம்பி ஓட்டு போட்டவங்களுக்கு, இவுங்க மாத்திக் காண்பிச்சது பஞ்சுக் கொட்டையை மிளகாகவும், மரத்தூளை மிளகாய்த் தூளாகவும் மாத்தி காட்டியிருக்காங்க. நகைக்கடன்களுக்கு தள்ளுபடியில் இருந்து இல்லத்தரசிகளுக்கு இலவசமாக பணம் வரைக்கும் வாய்க்கு வந்ததையெல்லாம் வாக்குறுதிகளாக அறிவிச்சுட்டு, இன்னைக்கு எதைக் கேட்டாலும் தடைப் போடுறேன் என்று சர்வாதிகாரமான அரசுதான், இந்த ஆளத் தெரியாத திமுக அரசு.

பொங்கலுக்குக் கொடுத்த பரிசு சரியா இல்லை, கொடுத்த பொருள்ல கலப்படம் இருக்கு, புளியில் பல்லி இருந்துச்சுன்னு சொன்னவங்க மேலே வழக்குப் போட்டு, போலீஸை வைச்சு மிரட்டுதனால, ஒரு குடும்ப வாரிசு தற்கொலை செஞ்சு இறந்துட்டாரு. பல ஊடகங்கள் இதை வசதியா மறக்கலாம், மறைக்கலாம்.ஆனால், நாங்களும் மனசாட்சி உள்ள மக்களும் மறக்கமாட்டோம். அதிமுக ஆட்சியில் கொரானா காரணமாக கிராம சபைக் கூட்டங்களை தள்ளி வைச்சப்ப, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், திமுகவைப் பார்த்து அரசு பயப்படுதுன்னு சொன்னாரு, இன்னைக்கு அதே ஸ்டாலின் ஆளுங்கட்சியான பிறகு. கொரானாவை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்களை ரத்து பண்ணிடுச்சு. அதிமுக ஆட்சியில் கொரானா காலத்தில் டாஸ்மாக் எதுக்கு திறக்குறீங்க, உடனே மூடுங்கன்னு அப்ப எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பேசினாரு. வீட்டு வாசலில் போர்டு புடிச்சுக்கிட்டு 10 நிமிஷம் போராடினாரு. இன்னைக்கு அதே ஸ்டாலின் ஆளுங்கட்சியான பிறகு, கொரானா கேஸ் 30 ஆயிரத்தைத் தாண்டியும் டாஸ்மாக்கை மூடவே இல்லை.

 நீங்களே நல்லா யோசிச்சு பாருங்க. ஸ்டாலின் ஆட்சியில் பார், ஒயின் ஷாப், எலைட் ஷாப், தியேட்டர், கிளப்புன்னு எல்லாத்தையும் திறக்கலாம். ஆனால், கோயில், மசூதி, சர்ச்சையெல்லாம் மூடணும். இதை வைத்தே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஸ்டாலினுக்கு குடிமக்கள் மீது நேசம் இல்லை. குடிகாரர்கள் மீதுதான் பாசம் இருக்கு. இப்படி எதிர்க்கட்சியாக இருந்தப்ப ஒரு வேஷம்; ஆளுங்கட்சியாக இருந்தப்ப ஒரு வேஷம். இது எப்படி இருக்கு என்றால், மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடமா? திமுக ஆட்சிக்கு வந்து எத்தனை நாள் ஆச்சு. அவுங்க முதல்வர் என்னெல்லாம் சாதனை செஞ்சுருக்காங்கன்னு கேளுங்க. ஒன்னுமே இருக்காது. முதல்வராகி ஸ்டாலின் என்ன சாதித்திருக்கிறார்? ஸ்டாலின் சைக்கிள்ல போனாரு; ஜிம்முக்கு போனாரு, ஸ்டாலின் மெட்ரோல போனாரு; பஸ்ல போனாரு, ஸ்டாலின்  டீக்கடையில் டீ குடிச்சாரு என்று ஒரே சாதனை மழைதான். இப்படியெல்லாம் செஞ்சா போதும், தமிழ்நாடு முதல் மாநிலமாக வந்திடும்னு நினைக்கிறாரு போல. இதில் ஹைலைட்டே, கவச உடை அணிந்து ஸ்டாலின் கொரானா வார்டுக்கு போனாரு, மக்களை சந்திச்சாருன்னு ஒரே விளம்பரம்.

எங்க ஆட்சியில் எங்க முதலமைச்சரும், அமைச்சர்களும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல், அங்கேயே தங்கி, அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே வேலை பார்த்து மக்களைக் காப்பாத்துனாங்க. இது விளம்பரம் இல்லை. உண்மை, இது மக்களுக்கே நல்லா தெரியும். அதிமுக ஆட்சியில் எங்க சாவு விழும், எப்போ சாவு விழும் என்று \ஸ்டாலின் காத்துக்கிட்டு இருப்பாரு. உடனே அங்கு கிளம்பி போய் அரசியல் பண்ணுவாரு. சாவு வீட்டு ஸ்டாலின் இப்போ எங்க போனாரு? திமுக ஆட்சி அலட்சியத்தால் 3 நீட் மாணவர்கள் தற்கொலை பண்ணி இறந்துட்டாங்க. ஏன், அந்த மாணவர்கள் வீட்டுக்கு ஸ்டாலின் துக்கம் விசாரிக்க போகல? இந்த திமுக ஆட்சி அராஜகத்தால திருத்தணியில் குப்புசாமி என்பவர் தற்கொலை செஞ்சு இறந்திட்டாரு. அவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க ஸ்டாலின் ஏன் போகல? தைரியமானவரா இருந்திருந்தா அங்கே போயிருக்கணும். போயிருந்தா அவுருடைய ஆட்சி சிக்ஸர் ஆட்சியான்னு தெரிந்திருக்கும். போன வருஷம் அண்ணன் எடப்பாடியார் பொங்கல் பணம் ரூ.2500 கொடுத்தபோது, ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டியதுதானே என்று கோஷம் போட்டவர்தான் இந்த ஸ்டாலின். இன்னைக்கு ஸ்டாலினே முதல்வரா வந்திருக்காரு. 5 ஆயிரம் என்ன, 10 ஆயிரமே கொடுக்க வேண்டியதுதானே.. ஆனால், கொடுக்கல.

500 ரூபாய்க்குக் கூட பெருமானமுள்ள கலப்பட பொருளைத்தான் கொடுத்திருக்காங்க. அதுவும் பாதி பேருக்குத்தான் கொடுத்திருக்காங்க. தமிழன், தமிழன் என்று பேசிப்பேசி தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி வளர்த்த கட்சி திமுக. இன்னைக்கு தமிழர் திருநாளான பொங்கலுக்கு தமிழன் வேட்டி. சேலை வாங்கிக் கொடுக்கக்கூட வக்கு இல்லாமல் வளர்ந்து இருக்கு. திமுகவில் நீங்க அமைச்சராகணுமா, ஆதாயம், அதிகாரம் வேணுமா? வாங்க, வாங்க, எங்ககிட்ட வாங்க. அதிமுகவில் இருந்துவிட்டு திமுகவுக்கு போனா, உங்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும். அதுவே திமுகவை மட்டும் நம்பி, உழைச்சு, உழைச்சு  தாலிக்கொடி முதல் அரைஞான் கயிறு வரை அடமானம் வைச்சு, போஸ்டர் ஒட்டி, போராட்டத்தில் கோஷம் போட்டு, ஜெயிலுக்கு போய்ட்டு வந்தீங்கன்னா, உங்களுக்கு பிம்பிளிக்கி பிலாபிதான். திமுகவில் எழுதப்படாத விதி ஒன்னு இருக்கு. அது என்னான்னா, அப்பாக்கள் சட்டமன்றத்தில். பிள்ளைகள் நாடாளுமன்றத்தில். உறவுகள் ஊராட்சி மன்றத்தில். கமிஷன் புரோக்கர்கள் கவர்மெண்டில். திமுகவை மட்டும் நம்பி வாழும் தொண்டர்கள் நடுரோட்டில். இவுங்களைப் போய் நம்பி அப்பாவியா ஆட்சியை ஒப்படைச்சிருக்கீங்க. திமுக தொண்டர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கு.

பிரசாரத்துக்கு ஸ்டாலினும், அவருடை மகனும் வந்தப்போ என்னெல்லாம் பேசுனாங்க. வடிவேல் ஜோக்குல வரமாதிரி, நான் புது சட்டை, புது பேண்ட் போட்டிருக்கேன். நான்  திருந்திட்டேன்னு மக்களை ஏமாற்றி ஜெயிச்சு வந்தாங்க. இன்னிக்கு தெரியது, அவுங்களோடு கிழிஞ்ச சட்டையின் பின்னாடிப் பக்கம். திமுக கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவுங்க நிறைவேற்ற மாட்டாங்க. அவுங்களால நிறைவேற்ற முடியாது. நீட் ஒழிப்பு முதல் 7 பேர் விடுதலை வரைக்கும் திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவே முடியாது. இப்போ நகராட்சி, மாநகராட்சி தேர்தல் வருது. அப்பாவும் பிள்ளையும் மறுபடி வருவாங்க. பிரசாரம் பண்ணுவாங்க. இஷ்டத்துக்கு வாக்குறுதி கொடுப்பாங்க. இந்த முறை நம்புனீங்கன்னா வாழ்க்கை பூராவும் வெம்ப வேண்டியதுதான். ஊர்ப்பக்கமா வந்தாங்கன்னா, நல்லா கேளுங்க. சட்டையைப் புடிச்சுக்கிட்டு கேளுங்க. சொன்னீங்களே செஞ்சீகளான்னு கேளுங்க. விடாதீங்க மக்களே. நாம் இழிச்சவாயன்கள் இல்லை. அவுங்க வேலைக்கு வைச்சிருக்குற முதலாளிங்க.” என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

click me!