’ஜெயலலிதாவோடு புதைக்கப்பட்டது...’ டென்ஷனைக் கிளப்பும் எடப்பாடி மாப்பிள்ளை..!

By vinoth kumarFirst Published Dec 25, 2018, 12:21 PM IST
Highlights

இப்போது இலைக்கட்சியில் ’தலை’ முதல் கிளை வரை அதிகாரச் சண்டை அதகளப்படுத்தி வருகிறது.  நகரச் செயலாளர் ஒருவர் அமைச்சருக்கு ஆட்டம் காட்டி வரும் விவகாரம்தான் இப்போது அதிமுகவில் ஹாட் டாபிக்! எல்லாம் எடப்பாடி மயம்.

ஜெயலலிதா காலத்தோடு அதிமுகவின் கட்டுப்பாடுகள் புதைக்கப்பட்டு விட்டன. இப்போது இலைக்கட்சியில் ’தலை’ முதல் கிளை வரை அதிகாரச் சண்டை அதகளப்படுத்தி வருகிறது.  நகரச் செயலாளர் ஒருவர் அமைச்சருக்கு ஆட்டம் காட்டி வரும் விவகாரம்தான் இப்போது அதிமுகவில் ஹாட் டாபிக்! எல்லாம் எடப்பாடி மயம்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தின ஊர்வலம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதற்காக அதிமுக நகர செயலாளர் ராமநாதன் சுவரொட்டிகள் அச்சிட்டிருந்தார். இதில் எம்.பி.,வைத்தியலிங்கத்தின் அனைத்து பதவிகளையும் போட்டு அச்சிட்டிருந்தார். ஆனால், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு அமைச்சர் மற்றும் பாபநாசம் ஒன்றிய செயலாளர் என இரு பதவிகளை மட்டும் அச்சிட்டிருந்தார். 

இதனைப் பார்த்த துரைக்கண்ணு ஆதரவாளர்கள் ராமநாதனிடம் கேட்டிருக்கிறார்கள். ’’அச்சு பிழை என நழுவி இருக்கிறார் ராமநாதன். ஆனாலும் அமைச்சர் கோஷ்டி, சம்பந்தப்பட்ட பிரிண்டிங் பிரஸ்க்கு சென்று அழைப்பிதழை கொடுத்து விசாரித்துள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள், ‘நாங்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்டசெயலாளர் என போட வேண்டும்’ என கூறினோம். ஆனால் ராமநாதனோ, ’நோட்டீஸ் அடிக்கச் சொன்னது நான்... நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்’ என மிரட்டி, வடக்கு மாவட்டசெயலாளர் பதவியை போடாமல் அச்சடித்து வாங்கி சென்றார் என உண்மையை போட்டு உடைத்துள்ளனர்.  

அதை அப்படியே அமைச்சர் துரைக்கண்ணுவுக்கும் கூறியுள்ளனர். முதல்வர் எடப்பாடி கடந்த மாதம் திருவாரூர் வந்த போது, ராமநாதனை அவரது காரில் ஏற்றி கொண்டு சென்றார். அப்போது இதனை பார்த்த வைத்தியலிங்கமும், துரைக்கண்ணுவும் ஆத்திரப்பட்டு, எல்லை வரை சென்று முதல்வரை அனுப்பி விட்டு அவருடன் செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைகண்ணு கண் முன்னே எதிர்கோஷ்டியினர் ராமநாதனை அடிக்கப் பாய்ந்தனர்.

மாவட்ட செயலாளர் என பதவிபோடாமல் நோட்டீஸ் அச்சடித்துள்ளார் என வரிசையாக புகார்களை அடுக்கியிருக்கிறார்கள்.  அனைத்தையும் கேட்ட அமைச்சர், ’’கவலைப்படாதீர்கள் விரைவில், ராமநாதனின் பதவியை பறிப்பதற்கான, நடவடிக்கையை சத்தமில்லாமல் செய்கிறேன்’’ என ஆறுதல் சொல்லி விட்டு சென்றிருக்கிறார். அதேபோல் ராமநாதன், தனது ஆதரவாளர்களிடம்,  ’’கவலைப்படாதீர்கள், இவர் வெறும் அமைச்சர்தான். முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை, நான் மாமா என்று தான் அழைப்பேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது’’ என கூறி தேற்றி வருகிறாராம். இதுவும் அமைச்சர் துரைக்கண்ணு காதுக்குப் போக அவர் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால் கும்பகோணம் அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டி இருப்பது வெட்ட வெளிச்சாமாகி உள்ளது. இது எப்போது எரிமலையாக வெடிக்கப்போகிறது என தெரியாமல் ஆதரவாளர்கள் கிறுகிறுத்து போய் தவிக்கின்றனர். 

’அந்த அம்மா இருந்த இப்படி ஆளாளுக்கு ஆட்டம் காட்டுவாங்களா?’ என அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் நடுநிலை தொண்டர்கள். 

click me!