
எழுத்தாளர் ஞானியின் மறைவு செய்தியைக் கேட்டு வருத்தமுற்றதாகவும், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர், நாடக ஆசிரியர் என பன்முகத் தன்மை கொண்ட ஞாநி என்கிற சங்கரன் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர் ஞானி.
சமூக விமர்சன நோக்குள்ள வீதி நாடகங்களும் மேடை நாடகங்களும் நடத்தி வந்தார். பரீக்ஷா என்ற நாடக குழுவை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இவருடைய எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. எழுத்து தவிர, குறும்படங்கள், நாடகங்கள் இயக்குதல் போன்ற பணிகளை அனைவரும் பாராட்டும்படி செய்து வந்தார். ஞாநி இயக்கிய பெரியார் குறித்த தொலைகாட்சிப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
சிறந்த அரசியல் விமர்சகராக மிகச் சிறப்பான பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்த சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். காலமான எழுத்தாளர் ஞானிக்கு பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், ஞானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு.ஞானி சங்கரன், காலமானார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமுற்றேன். அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், நாடக கலைஞர், அரசியல்வாதி என பன்முகத் திறனுள்ளவர் அவர் என்று பதிவிட்டுள்ளர்.
மற்றொரு டுவிட்டரில், ஞானியின் மறைவு பத்திரிகை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும், ஞானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.