"அரசியலுக்கு ரஜினி, கமல் யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை" - ஜி.கே.வாசன்!!

First Published Jul 29, 2017, 1:02 PM IST
Highlights
gk vasan pressmeet about rajini kamal


அரசியலுக்கு ரஜினி, கமல் என யார் வந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணி மண்டபத்தில், அப்துல்கலாம் வீணை வாசிக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இல்லை. அதே நேரத்தில், திருக்குரான், பைபிள், திருக்குறள் ஆகியவையும் வைத்தால், நன்றாக இருக்கும்.

அப்துல்கலாம் ஜாதி, மதம், இனம் அனைத்தையும் கடந்து ஒப்பற்ற தலைவராக இருந்தவர். அவருக்கு மணிமண்டபம் கட்டியது பெரும் மகிழ்ச்சி. அங்கு பகவத் கீதையுடன், திருக்குறள், பைபிள், குரான் ஆகியவை வைப்பார்கள் என நம்புகிறோம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்டு தோல்வி அடைந்ததற்கு காரணம், மக்கள் 3வது அணியை ஏற்கவில்லை. 3வது அணிக்கு வாக்கும் கொடுக்கவில்லை. வாய்ப்பும் கொடுக்கவில்லை. இதை நாடே அறியும். இதற்காக இப்போது நான் எதையும் சொல்ல முடியாது.

உள்ளாட்சி தேர்தலுக்காக சிறப்பான பணிகளை செய்து வருகிறோம். இதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமாகாவை வளர்த்து வருகிறோம். அதேபோல் வரும் 4ம் தேதி முதல் கிராமம் தோறும் சுற்றுப்பயணம் சென்று உள்ளாட்சி தேர்தலில், தமாகாவை வலுப்பெற செய்ய உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தமாகா தாயாராக இருக்கிறது. தேர்தலை உடனே நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மாணவர்களின் சிரமங்களை போக்க, நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

தற்போது நாங்கள், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருக்கிறோம். தேர்தல் சமயத்தில் கூட்டணி பற்றி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிப்போம்.

கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. மறுக்கவும் முடியாது. கமல் கூறிய கருத்துக்கு, சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க வேண்டும். அதை விமர்சனம் செய்யக் கூடாது.

ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை. நாங்கள் அவர்கள் மீது மதிப்பு வைத்து இருக்கிறோம். எப்போதும் போல நட்பு ரீதியாக பழகி வருகிறோம். எஙகளுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், மதிப்பு என்றுமே மாறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!