அம்மாவோட பயணித்தவங்க நீங்க! நான் சொல்ல வேண்டாம்! அரசியலில் இறங்கி விளையாடுங்க.. சசியை அழைக்கும் ஜெ. நிழல்.!

By vinoth kumarFirst Published Dec 14, 2022, 2:18 PM IST
Highlights

இப்போது இருக்கும் தலைவர்கள் எல்லாம் எனக்கு தெரிந்தவர்கள் தான். நான் யாருக்கும் ஆதரவாகவும் இல்லை, குறிப்பாக எதிர்ப்பாகவும் இல்லை. காரணம் அம்மா அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேயே நான் நின்று கொண்டிருக்கிறேன்.

அதிமுக என்ற மாபெரும் கட்டமைப்பு சிதையாமல் இருக்க வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நீங்கள் இணையாத காலத்தில் இரட்டை இலை முடக்கப்பட்டு விடுமோ? என்ற பயம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;-அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நூற்றாண்டுகளை கடந்து வாழும் என்ற வார்த்தைக்கு  உயிர் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஏன் அதுதான் உங்கள் ஆசையும் கூட! இப்போது இருக்கும் தலைவர்கள் எல்லாம் எனக்கு தெரிந்தவர்கள் தான். நான் யாருக்கும் ஆதரவாகவும் இல்லை, குறிப்பாக எதிர்ப்பாகவும் இல்லை. காரணம் அம்மா அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலேயே நான் நின்று கொண்டிருக்கிறேன். பிரிந்து கிடக்கும் தொண்டர்களை என் உறவாகவே பார்க்கிறேன். இதய தெய்வங்களின் பிள்ளைகளாகவே கருதுகிறேன். என் ஆசை எல்லாம், கட்சியை அம்மா அவர்கள் நடத்தியது போல் வலிமையாக நடத்த வேண்டும் என்பதே! அதுவே தொண்டர்களின் பேராசை!

பிரிந்து கிடந்தாலும் தொண்டர்கள் நெருங்கிப் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும் தலைவர்கள் வேண்டுமானால் பேசாமல் இருக்கலாம். நிர்வாகிகள் உறவாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். தலைவர்கள் சிலர் வெளியில் தெரியாமல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையாக கழகத்தை நேசிப்பவர்கள் எல்லோரும் கழகம் வலிமை பெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். இப்போது பிரிந்து இருக்கும் தலைவர்களுக்கு தனித் தனியாக தொண்டர்கள் இருக்கிறார்கள். இந்த தொண்டர்கள் எல்லாம் ஒன்றும் புதிதாக சேரவில்லை. எல்லோரும் இதய தெய்வங்களின் தொண்டர்கள் தான்.  சேர்ந்திருந்தவர்கள் எல்லாம் இன்று பிரிந்து கிடக்கிறார்கள் அவ்வளவுதான். இதில் சதவீதம் வேண்டுமானால் வேறுபடலாம். ஒருவருக்கு  அதிகமாக இருக்கலாம். ஒருவருக்கு குறைவாகவும் இருக்கலாம். 

ஆனால் அரசியலில் நாம் ஒன்றைத்தான் கவனிக்க வேண்டும். மொத்தம் 100 ஓட்டுக்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெற்றிக்கு 50 ஓட்டுக்கள் தேவைப்படுகிறது என்றால், நம்மிடம் இருந்த 40 ஒட்டுக்களும் பிரிந்து கிடந்தால் வெற்றி எப்படி நமக்கு கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று மக்கள் நினைத்தால் தான் அவர்கள் ஒட்டும் உங்களுக்கு கிடைக்கும். அனைவரையும் அரவணைத்து கொள்வது என்பது சிறப்பு. கழகம் வலிமை பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பு. அதிமுக என்ற மாபெரும் கட்டமைப்பு சிதையாமல் இருக்க வேண்டும். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நீங்கள் இணையாத காலத்தில் இரட்டை இலை முடக்கப்பட்டு விடுமோ? என்ற பயம் தொண்டர்களுக்கு வந்துவிட்டது. அதை சரி செய்வது உங்கள் பொறுப்பு.

பொறுப்பாளர்களை நியமிக்க நியமிக்க ஒரு அமைப்பு வலுப்பெறும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பதவிகள் வழங்கப்படும் போது அவர்கள் இன்னும் தீவிரமாக வேலை செய்வார்கள். பதவிகள் அவர்களுக்கு கூடுதல் மரியாதையை சமூகத்தில் பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை. எல்லோரும் பொறுப்பாளர்களை நியமிக்கும் நேரத்தில் சின்னம்மா அவர்கள் மட்டும் இன்னும் பொறுப்பாளர்களை நியமிக்காமல் இருப்பது ஏனென்றும் புரியவில்லை.கட்சியை வலிமை படுத்த என்ன தேவையோ அதை  நீங்கள் செய்ய வேண்டும். உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அம்மாவோடு பயணித்தவர்கள் நீங்கள். உங்களுக்கு அறிவுரை சொல்ல என்னால் முடியாது. நான் சொல்வது வெறும் ஆலோசனை தான். கழகத்தை வளர்க்க ஆசை கொள்ளுங்கள். நீங்களும் வளர்வீர்கள்..! கூடவே தேய்ந்து கொண்டிருக்கும் தொண்டர்களும் வளர்வார்கள்.. என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

click me!