
கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட நிலையில் அவரது டிவிட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு பாஜக புதிய நிர்வாகிகளின் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அண்ணாமலை தமிழக பாஜக தலைவரான நாள் முதல் தமிழக பாஜகவில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. பாஜகவில் எதிர்பார்த்தபடியே கட்சி நிர்வாகிகள் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் முதல் கட்டமாக பல்வேறு நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட பார்வையாளர்கள், துணை தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியலில், மாநில துணை தலைவராக இருந்த நயினார் நாகேந்திரனுக்கு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக ஏ.பி.முருகானந்தம், சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜகவின் கலை கலாச்சார பிரிவினுடைய மாநில தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், தனது அணி நிர்வாகிகள் சிலரை நீக்கினார். அண்ணாமலை அனுமதி இல்லாமல் அவர்களை நீக்கியதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளையும் அவர் நியமித்தது உத்தரவிட்டார். இப்படி தன்னிச்சையாக காயத்ரி ரகுராம் செயல்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து காயத்திரியின் இந்த அறிவிப்பு செல்லாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டார். பழைய நிர்வாகிகளே தொடர்ந்து நீடிப்பார்கள் எனவும் அவர் தனது உத்தரவில் தெரிவித்தார். மேலும் அவரின் செயலை தடுக்கும் வகையில் அண்ணாமலை இந்த நிர்வாகிகளை மீண்டும் நியமனம் செய்தார்.
அப்போது இருந்து அவர்களுக்குள் கசப்பு, மோதல் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. இதை அடுத்து காயத்ரியை அண்ணாமலை நீக்க போவதாக செய்திகள் வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த செய்திகள் தீவிரமாக இணையத்தில் பரவின. ஆனால் காயத்ரி, என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை. எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார். கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. பாஜக எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பாரத தாய் பூமி எனவே பெண்கள் எப்போதும் வழி நடத்துவார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் காயத்திரி ரகுராம் மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த டிவீட் இணையத்தில் வைலாகி வருகிறது. ஏற்கனவே குஷ்புவுக்கும் காயத்ரி ரகுராமுக்கும் இடையே சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.